ஆறுமுகமான பொருள்
61
அந்த இறைவனாம் சிவ பெருமானே நேரில் வந்து வாதிட்ட போதும், "மால் தருமருட்சியால் கண் வடிவேலாம் காட்டினாலும் சாற்றிய செய்யுள் குற்றம், சடைகொண்டு வெருட்டல் வேண்டா" என்று வழக்காடியவர் ஆயிற்றே, இந்த அஞ்சா நெஞ்சன். நக்கீரனது இதயத்தில் இறைவனாம் சிவபெருமான் இதனால் தான் அதிக இடம் பெறவில்லை போலும், அவரது இதயத்தில் பெரியதோர் இடத்தை இந்த முருகனே ஆக்கிரமித்துக் கொள்கிறான். முருகன் என்றதுமே அவரது உள்ளத்தில் ஒரு மோகம் பிறந்திருக்கிறது. முருகன் என்ற சொல்லே மிக்க பழமையான தமிழ்ச்சொல். மணம், இளமை, கடவுள் தன்மை, அழகு என்றெல்லாம் விரிந்த பொருளிலே தான் முருகு என்ற சொல் ஆதியில் தமிழில் வழங்கப்பட்டிருக்கிறது. முருகை யுடையவன் இறைவன் என்று எண்ணிய தமிழ் மக்கள் அவனுக்கு முருகன் என்று பெயரிட்டு வாழ்த்தியதும், வணங்கியதும் பொருத்தமாகவே அமைந்திருக்கிறது. இந்த முருக வழிபாட்டைத் துவங்கியவர் யாராயினும் ஆகுக. ஆனால் அந்த வழிபாட்டுக்கு ஓர் உயரிய ஸ்தானம் அளித்து ஆதித்தமிழ் மக்களிடத்தே நின்று நிலவச் செய்தவர் நக்கீரர் மணங்கமழ் தெய்வத்து இளநலம் காட்டியவர் அல்லவா?
நக்கீரர் அழகை ஆராதிப்பவர்தான். இளமைக்கு வணக்கம் செலுத்துபவர்தான் என்றாலும் அவரது உள்ளம் எல்லாம் முருகனிடம் அவர் கண்ட இறைமையிலேயே பதிந்து நின்றிருக்கிறது. பாட்டின் துவக்கத்திலேயே சூரியனைப் போன்ற ஒளி உடைய திருமேனியும், அடைந்தோரைக் காக்கும் திருவடிகளும், பகைவரை அழிக்கும் படைகள் தாங்கிய திருக்கரங்களும் உடையவன் முருகன் என்று அறிமுகம் செய்து வைக்கிறார். அத்தோடு தெய்வயானையின் கணவன் அவன், கடம்ப மாலையை மார்பிலும், காந்தள் கண்ணியை முடியிலும் தரித்தவன், வேற்படையால் சூரன் முதலியவர்களை அழித்தவனும் அவனே என்று புகழ்கிறார்.
'சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடுவேல்' அவர் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை. இந்த சூரசம்ஹாரம் நடத்த அவன் அந்தத் திருச்சீரலைவாயிலிலே கார்த்திகேயனாக, அறுமா முகவனாக எல்லாம் உருப்பெற்று வளர்ந்ததைச் சொல்கிறார். ஒவ்வொரு முகத்திலும் ஒவ்வொரு திருக்கரத்திலும் ஈடுபட்டு நின்று அவன்