பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

திருச்சிற்றம்பலம்

அருநூற்புலமை ஆன்றோர்
சித்தாந்தச் செல்வர்
பேராசிரியர் டாக்டர்
ப. இராமன், எம்.ஏ., பி.எச்.டி.

அணிந்துரை

"இருந்தமிழே உன்னால் இருந்தேன் - இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்" என்ற தமிழ் விடு தூதுப் புலவரைப் போல் இருந்தமிழுக்காக இருந்த பெரியார். நம் வணக்கத்திற்குரிய திரு.தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள். மாவட்ட ஆட்சியராய் உயர்ந்த பதவி வகித்தாலும் தமிழ்மொழி மீது ஆராக் காதல் கொண்டு தமிழுக்கும் சமயத்திற்கும் பெருந்தொண்டு செய்து வந்தார்கள். "என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்றபடி தம் தமிழ்ப் பேச்சையும் எழுத்தையும் இறைவன் பெருமை பேசுவதில் பயன்படுத்தி வந்தார்கள். இருபதாம் நூற்றாண்டில் தமிழன்னை ஈன்ற தவப்புதல்வர்களில் இச்சான்றோரும் ஒருவர் எனின் மிகையாகாது.

இவர்கள் எழுத்திலும் பேச்சிலும் எளிமை, இனிமை, ஆழமுடைமை, செந்தமிழ், நகைச்சுவை, ஆய்வுத் திறன், தெளிவான முடிவு முதலிய சிறப்புக்கள் பொதிந்து கிடக்கும். எளிதில் உணர்ந்து கொள்ள முடியாத இலக்கிய, சமயக் கருத்துக்களை, கதைகளை எடுத்துக் கூறி பாமரரும் புரிந்து கொள்ளச் செய்து விடுவார்கள்.

இவர்கள் கொண்டிருந்த தமிழ்ப் பற்றால் தமிழ்க் கடவுளான செவ்வேட் பரமனிடம் இவர்கள் அடைக்கலமானதில் வியப்பில்லை. 'ஆறுமுகமான பொருள்' என்ற அருமையான நூலில் இவர்கள் ஆறுமுகன் அடியார்களை அப்பெருமானிடம் ஆற்றுப்படுத்துகிறார்கள் என்பதை நூலுக்குள் நுழைந்தவுடன் அறிந்து மகிழலாம். இவ்வகையில் இவர்களை இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் எனலாம்.

முதலில், 'ஆறுமுகமான பொருள் எனத் தொடங்கிக் கந்தர் சஷ்டி கவசத்தில் இந்நூல் முடிகிறது. பன்னிருகை வேலனுக்குப் பன்னிரண்டு