பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

69



சூரசம்ஹாரத்தைத் தானே பெரிய திருவிழாவாக நாம் கொண்டாடுகிறோம். நம் உள்ளத்தில் உள்ள அகங்காரம், மமகாரம் எல்லாவற்றையும் தடியவும் அலங்காரக் கந்தனாம் அழகனால்தானே முடியும்? ஆதலால் அச் சூர்முதல் தடிந்த தலமாம், அத்திருச்சீர்அலைவாய்க்கே செல்லலாம் நாமும் அருணகிரியாருடன். ஏதோ கடற்கரைப்பட்டினம் என்றாலும், நீர் நிலைகளும் அதனால் வளம் பெறும் வயல்களும் நிறைந்த இடம்தானே அது. அங்குள்ள வயல்களில் தண்ணீர் மட்டுமா பாய்கிறது. தண்ணீருடன் சேல் மீன்களும் சேர்ந்துதான் பாய்கிறது. பாய்ந்து பெருகிய அத்தடங்களில் துள்ளியும் விளையாடுகிறது. அதனால் வயலில் உள்ள பயிர்கள் மட்டுமல்ல வயற்கரையில் உள்ள பொழில்களுமே அழிகின்றன. இது தவிர கடம்ப மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. அந்த மலரின் மணம் நிறம் எல்லாம். மங்கையர்களுக்கு மாமயிலோனையே நினைப்பூட்டுகின்றன. அதனால் அத்தனை காலம் கட்டிக் காத்த அவர் தம் நிறை, கன்னிமை எல்லாமே அழிகிறது. அந்த ஊரிலே சூரன் அழிந்திருக்கிறான். அந்தச் சூரனை அழித்த வேலோ ஒரு தடவை கடலையும், மற்றொரு தடவை மலையையுமே அழித்திருக்கிறது. இவ்வளவுதானா அழிக்கப்படவேண்டிய பொருள். இன்னும் ஒரு பொருள் நம் எல்லோரிடத்தும் இருக்கிறதே. நாமெல்லாம் பிறந்த அன்றே நம் தலையில் இப்படித்தான் இவன் வாழ்வு முடிய வேண்டும் என்று எழுதியிருக்கிறானே அந்தப் பிரமன். அப்படி அவன் கையாலே எழுதிய எழுத்து, அழியா எழுத்தாக நின்றல்லவா நம் வாழ்வில் எத்தனையோ அலங்கோலங்களைச் செய்கிறது. அந்த எழுத்தையும் அழிக்கத்தானே வேண்டும். அந்த எழுத்தை அழிக்கும் ஆற்றல் பெற்றவன் அந்த இறைவனாம் முருகன் தானே என்றெல்லாம் எண்ணியிருக்கிறார் அருணகிரி. அன்று பிரமன் கிறீச் கிறீச் என்று கையால் எழுதிய எழுத்தைக் குமரன், செந்தூர் வேலவன் தன் காலாலேயே அழித்து விடுகிறான். ஒரே ஒரு துடைப்பினாலேயே பிரமன் விதித்தவிதியே அழிகிறது. அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலனது காலால் என்கிறார் அருணகிரி.


சேல்பட்டு அழிந்தது செந்தூர்
வயல் பொழில்; தேங்கடம்பின்
மால்பட்டு அழிந்தது பூங்கொடி