பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

71


வேணும். திருச்செங்கோடு என்னும் தலத்திற்கே விரைந்து அங்கு பின்னிப் பிணைந்து கிடக்கும் பெருங்கோட்டிலேயே ஏற வேணும். அம்மலையிலே இருப்பவர் அர்த்தநாரி என்பர் அறிந்தவர்கள். அவர்தான் அங்கு பிரதான தெய்வம் என்றாலும் அவர் தென் பக்கமாகக் கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டு, வட பகுதியைத் தன் மகனாம் குமரனுக்கு ஒதுக்கிக் கொடுத்து விடுகிறார். இந்தச் செங்கோட்டு மலையில் நிற்பவனே செங்கோடன். அலங்காரம் பாட முனைந்த அருணகிரி அதனை மறந்து அந்தச் செங்கோடனின் அழகிலே மெய்மறந்து விடுகிறார். அந்த அழகனின் அழகை அள்ளிப் பருக இருப்பது இரண்டு கண்கள்தானே. இவை போதும் ஒரு நாலாயிரங் கண்களாவது படைத்திருக்க வேண்டுமே. அந்தப் பாவி பிரமன் இப்படிப் படைக்காது போய் விட்டானே அங்கலாய்க்கிறார்.

மாலோன், மருகனை மனறாடி
மைந்தனை, வானவர்க்கு
மேலான தேவனை, மெய்ஞ்ஞான
தெய்வத்தை மேதினியில்
சேலார் வயல் பொழில்
செங்கோடனைச் சென்று கண்டுதொழ
நாலாயிரங்கண் படைத்திலனே
அந்த நான்முகனே

என்பது பாட்டு. நாம் இந்த அருணகிரியைப் போல அத்தனை ஆசை உடையவர்கள் இல்லை. இரண்டு கண்களாலேயே அள்ளிப் பருகி ஆனந்தம் அடையலாம்.

அருணகிரியாருக்கு ஏனோ, தன்னைப் படைத்த பிரமன் பேரிலே இத்தனை கோபம். செந்தூர் சென்றால் அங்கு அவன் எழுதிய தலை எழுத்து அழியும் என்கிறார். தன்னைத் தணிகைக்கு அழைக்காத குறைக்கு அந்தப் பிரமன் பேரிலேயே பழியைப் போடுகிறார். திரும்பவும், கண்டு தொழ நாலாயிரம் கண்கள் படைக்காமல் போய்விட்டானே பாவிப்பயல் என்று திட்டவே செய்கிறார். அந்தப் பிரமன் என்னதான் பண்ணுவான்! அவனோ முன்னமேயே குட்டுப்பட்டவன். இனியாவது இப்படிக் கவிஞர்களிடத்தும் கலைஞர்களிடத்தும் குட்டுப்படாமல் தப்பித்துக் கொள்ள வேண்டும். அவன் தலைவிதி எப்படி இருக்கிறதோ யார் கண்டார்கள்!