உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

73


சடாமகுடத்தில் உள்ள கங்கையை அள்ளி மற்றொரு கையில் உள்ள தீயை அவிக்கறது. தலையில் உள்ள அறுகம்புல்லைப் பறித்து மானுக்கு உணவு ஊட்டுகிறது. பிறையையே பிடுங்கி பாம்பின் வாயிலே செருகுகிறது. இப்படி எல்லாம் தந்தையிடம் விளையாடி நிர்த்தூளி பண்ணுகிறது குழந்தை.

இப்படி எல்லாம் உண்மையில் நடந்ததா? என்று என்னிடம் கேட்காதீர்கள். சிவபெருமான் என்னும் இறைவனும் அவன் திருக்கோலமும், அவன் தேவியும், குமரரும் எல்லோரும் கட்புலனுக்கு எட்டாத கடவுளைக் காணத் துடிக்கும் கலைஞனின் கற்பனை வடிவங்கள் தானே. ஆகவே தந்தையையும் தாயையும் மக்களையும் கற்பனை பண்ணத் தெரிந்த கலைஞனுக்கு, இந்தக் கலை விளையாட்டையும் கற்பனை பண்ணத் தெரியாமலா போகும்? அப்படிக் கற்பனை பண்ணிக் கவிதை எழுதிய கலைஞர் தான் குமரகுருபரர். வைத்தீஸ்வரன் கோயில் முத்துக்குமரன் பேரில் பாடிய பிள்ளைத் தமிழில் ஒரு பாட்டில்தான் இப்படி ஒரு கற்பனை. பாட்டு இதுதான்.


மழவு முதிர் கனிவாய்ப் பசுந்தேறல்
வெண்துகில் மடித்தலம் நனைப்ப,
அம்மை
மணிவயிறு குளிர, தவழ்ந்து ஏறி
எம்பிரான் மார்பினில் குரவை ஆடி
முழவு முதிர் துடியினில் சிறுபறை
முழக்கி, அனல் மோலிநீர் பெய்து
அவித்து
முளைமதியை நெளி அரவின் வாய்மடுத்து,
இளமானின் முதுபசிக்கு அறுகு அருத்தி,
விழவுமுதிர் செம்மேனி வெண்ணீறு
தூள் எழ மிகப் புழுதி யாட்டயர்ந்து
விரிசடைக் காட்டினில், இருவிழிகள்
சேப்ப, முழுவெள்ள நீர் துளைய ஆடி
குழவுமுதிர் செவ்விப் பெருங்களி வர,
சிறுகுறும்பு செய்தவன் வருகவே
கரவுகமழ் தருகந்த புரியில் அருள்
குடிகொண்ட குமரகுருபரன் வருகவே