பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

77




கூனே மதிநுதல் தெய்வக்
குறப்பெண் குறிப்பு அறிந்து
அருகு அணைந்து உன்
குற்றேவல் செய்யக் கடைக்கண்
பணிக்கு எனக் குறை இரந்து
அவள் தொண்டைவாய்
தேன் ஊறு கிளவிக்கு
வாயூறி நின்றவன்

என்று. சுவைபடச் சொல்லுவார். இப்படி எல்லாம் தையல் நாயகி மருவு தெய்வ நாயகன் மதலையாம் முத்துக்குமரன், மையல் கொண்டு வள்ளியை மணம் புணர்ந்ததை எல்லாம் சொல்லுவதால் குமரகுருபரர் அவனது இளமை நலத்தில் எவ்வளவு ஈடுபட்டிருந்தார் என்பது விளங்கும்.

இறைமையிலும், இளமை நலத்திலும் ஈடுபட்டிருந்தவர். அவன்றன் நிறைந்த அழகிலும் ஈடுபட்டு நின்றது வியப்பில்லை. புன்முறுவல் பூத்தமலர்ந்த பூங்கொடிக்கும் மோகம் அளிக்கும் முகமதியையும், ஏன்? கும்பமுலைச் செவ்வாய் கொடி இடையார் வேட்டு அணைந்த அம்பொன் மணிப்பூண் அகன் மார்பையும், பாடிப் பரவுவதிலே திருப்தி அடையாதவராய், கடைசியில் இளம்பரிதி நூறு ஆயிரங்கோடி போல வளந்தரும் தெய்வீக வடிவுடையவன் என்றே கூறிப் பரவசம் அடைவார்.

இப்படி, அழகு கனிந்து முதிர்ந்த இளங்கனியாகவே, அந்த மறைமுடிவில் நின்ற நிறைசெல்வனாம் அழகனை, இளைஞனை காணுகின்றார். குமரகுருபரர், தெய்வமாகக் கண்ட நக்கீரர். அழகனாகக் கண்ட அருணகிரியார், இளைஞனாகக் கண்ட குமரகுருபரர் இம்மூவரும் கண்ட முருகனை, நாமும் அன்னவர் நிலையிலே நின்று கண்டு, வந்தித்து வணங்கத் தெரிந்து கொண்டோம் என்றால் அதைவிட நாம் பெறுகின்றபேறு வேறு என்னதான் இருத்தல் கூடும்.

ஆறிரு தடந்தோள் வாழ்க, அறுமுகம் வாழ்க, வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க அன்னான்
ஏறிய மஞ்ஞை வாழ்க, யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க, வாழ்கசீர் அடியார் எல்லாம்.