பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

ஆறு செல்வங்கள்

மேற்போக்காகப் படிப்பதைவிடக் கருத்துான்றிப் படிப்பது நல்லது. ஆம், அகலமாக உழுவதிலும் ஆழமாக உழுவதே நல்லது என்பது அறிஞர்களின் கருத்து.

கல்லாத மக்களிடத்தும் சில பொழுது அறிவு காணப்படும். எனினும் அது குட்டைகளில் தேங்கிக் கிடக்கும் கலங்கிய நீர் போன்றதே. கற்றவருடைய அறிவோ ஆறுகளில் ஊறிச் சிலுசிலுத்து ஒடுகின்ற தெளிந்த நீரைப் போன்றது. 'கல்வி வேறு அறிவு வேறு' என்பதை ஒப்புகிற ஒவ்வொருவரும் "கற்றவனுடைய அறிவு வேறு" என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கற்றவரும் கல்லாதவரும் மக்களே அன்றிக் கற்களே ஆயினும் முன்னது வைரக்கல், பின்னது கருங்கல் என்றாகும்.

"என் மகன் படிக்கவில்லை. எனக்கு இரண்டு எருமைகள் உள்ளன. அவற்றை மேய்த்துக் கொண்டிருக்கிறான்” என்றான் ஒருவன். அதைக்கேட்ட மதுரைப் பெரும்புலவர் கவிராச செகவீர பாண்டியனார் அவர்கள் கூறியது என்ன தெரியுமா? "இனி இரண்டு என்று எவரிடமும் கூறாதே, உனக்கு மூன்று எருமைகள் உள்ளன என்றே கூறு" என்பதே. பாவம் கல்லாத மக்கள் பொல்லாத விலங்குகள் என்பது அப்புலவர் பெருமகனது கருத்து போலும்.

கல்லாத மக்கள் விலங்குகள் என்பது மட்டுமல்ல, அவர்கள் நிறைந்து காணப்படும் நாடும், "நாடாகா; அது காடு" அந்நாட்டை ஆளும் மன்னனும், "நாடாளும் மன்னனாக" இல்லாமல், 'காடாளும் வேடனாகவே' காட்சியளிப்பான்.

கல்விச் செல்வம் இளமையிற் பெறவேண்டிய ஒன்று. முதுமையிற் பெறவேண்டிய செல்வங்களனைத்திற்கும் இது உற்ற துணையாக இருக்கும்; முதுமையிற் கல்வி முயன்றாலும் வாரா. வந்தாலும் தங்கா, முதுமையில் எதுவுமே வராது