பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

13

கேட்பவன் மோசமானவன். தெரிந்துகொண்டு கேள்விகளைக் கேட்பவன் கலகக்காரன். தெரிந்துகொண்டதாக நினைத்துக் கொண்டு கேள்விகளைக் கேட்பவன் அறிவற்றவன். தெரிந்து கொள்ள விரும்பித் துடிதுடித்துக் கேள்விகளைக் கேட்பவன் பொறுமையற்றவன். அறிய வேண்டியதை அறிந்து கொள்ள விரும்பித் தகுதியுடையவர்களை அணுகி அமைதியாகக் கேட்டு அறிபவனே அறிஞன்.

ஒரு மனிதனை 'யார்?' என்று அறிய இரண்டுவித வழிகள் உள்ளன. ஒன்று அவனுடைய நண்பர்கள் யார்? என் அறிந்து கொள்வது. மற்றொன்று அவனுடைய கேள்விகள் என்னென்ன? என அறிந்துகொள்வது. முன்னது அவனுடைய நடத்தையையும், பின்னது அவனுடைய அறிவையும் தெளிவாகக் காட்டிவிடும்.

"சாதுக்கு சாது மிலாதோ சங்கே கர்கே ஞானகே தேர்தோ பாத், கத்தைக்கு கத்தை மிலாதோ தோதோமாறே லாத்” என்பது ஒரு இந்துஸ்தானிப் பழமொழி."சாதுக்களும் சாதுக்களும் சந்தித்துக் கொண்டால் இரண்டொரு பேச்சுக்கள் மட்டுமே பேசுவார்கள். அதுவும் சந்தேகத்தைப் போக்கக் கூடியதாகவிருக்கும். அதுவும். ஞானமார்க்கமானதாகவே யிருக்கும். கழுதையும் கழுதையும் சந்தித்துக் கொண்டால் ஒவ்வொன்றும் மறுபக்கம் திரும்பிக்கொண்டு ஆளுக்கு இரண்டு உதைகொடுத்துக் கொள்ளும்" என்பது இதன் பொருள். கேள்வியின் சிறப்பையும், சந்திப்போரின் தகுதியையும் விளக்க இதைவிட நல்ல பழமொழி வேறில்லை.

கேள்விச் செல்வத்தைப் பெறும் வழியும் இரண்டு. ஒன்று கேட்டு அறிவது மற்றொன்று கேளாமல் அறிவது. "சொல்லாமற் சொல்லுதல்" என்பது குறிப்பினால்