பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

ஆறு செல்வங்கள்

உணர்த்துதல், "நினையாமல் நினைத்தல்" என்பது மறந்து நினையாமல், மறவாமலே நினைத்திருத்தல். "போகாமற் போதல்" என்பது, எங்கு போகிறோம்? என்ற எண்ணமே இல்லாமற் போதல். "கேளாமற் கேட்டல்" என்பது நாமாகக் கேளாமல் பிறர் தாமாகச் சொல்வதைக் கேட்டல்.

கேளாமற் கேட்கும் இடங்கள் பேச்சு மேடை, இசையரங்கு நாடகக் கொட்டகை, நிழற்படக் கொட்டகை, இரயில் நிலையம், ஆற்றங்கரை, குளத்தங்கரை, தண்ணிர்க் குழாய் முதலியன.

கேளாமற் கேட்கும் வாய்ப்பை இயல்பாகப் பெற்றவர்கள் வண்டியோட்டிகளே. மாடு, குதிரை, ரிக்சா, மோட்டார் வண்டிகளிற் பயணஞ் செய்வோர் வண்டியோட்டி ஒருவன் இருப்பதாகக்கூட எண்ணாமல், தாங்கள் மட்டுமே தனித்து இருப்பதாக நினைத்துப் பேசக்கூடாதவைகளை யெல்லாம் பேசிக் கொண்டே போவார்கள். வண்டியோட்டிகளுக்குத் தெரியாத செய்தி ஊரில் எதுவுமேயிராது! இந்த வண்டியோட்டிகள் மற்றவர்களைவிடத் திறமைசாலிகளாகக் காணப்படுவது இதன் பொருட்டேயாம். இங்கிலாந்தில் ஒரு வண்டியோட்டி சிறந்த எழுத்தாளனாக மாறிப் பெரும் பொருள் திரட்டி விட்டானாம். அவன் முதலில் எழுதி வெளியிட்ட நூலின் பெயர் என்ன தெரியுமா? "என் காதில் விழுந்தவை" என்பதே. அவனைப் பொறுத்தமட்டில் கேள்வி அவனுக்குச் செல்வமாகவே மாறிவிட்டது.

ஆகவே, நீ கேளாமற் கேட்கும் செல்வத்தையே மிகுதியாகப் பெறு. நீயாக எதையும் அவசரப்பட்டுக் கேட்டுக் கொண்டிராதே. அவர்களே சொல்லும்படியான ஒரு சூழ் நிலையை உண்டாக்கு. அப்போதும் அவர்கள் சொல்ல