பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

ஆறு செல்வங்கள்

கூறிக் கொண்டிருந்தேன். உடனே பக்கத்தில் இருந்தவர் "ஏய்யா இந்தத் தொந்தரவு? பேசாம ஊருக்குப் போய்ச் சேருங்கய்யா. அவர் ஊமை" என்றார். அவர் எனது அறிவுக்கு எத்தனை புள்ளி போட்டிருப்பாரோ தெரியாது. ஆனால், எனது அறிவுக்கு என்னால் ஒரு புள்ளியும் போட முடியவில்லை. நானும் இக்கேள்விகளைக் கேளாமல் பயணம் செய்திருக்கக் கூடாதா? என எண்ணி வெட்கினேன்.

கேள்வி கேட்பதற்கு மட்டுமல்ல, கேட்பவர்களுக்கு விடை அளிப்பதற்குக்கூட பொறுமை வேண்டும். விடை கூறுமுன் விழிப்பாகவும், விடை கூறுவது சுருக்கமாகவும் இருக்க வேண்டும். செல்வத்தைச் சேமித்து வைப்பது போல, சில பெரியவர்கள் அறிவையும் அனுபவத்தையும் சேமித்து வைத்திருப்பார்கள். அவற்றைப் பெற விரும்பி வருபவர்களுக்குத் தகுதியறிந்து அளவோடு சிறிது வழங்குவது "கொடைத்தன்மை" எனவும், அதையும் வழங்க மறுப்பது "கருமித்தனம்" எனவும் கருதப்பெறும் ஆனால், அந்த விடை எவருக்கும் தீமை பயவாததாக இருத்தல் வேண்டும்.

ஒருவன் உன்னிடம் வந்து, "அவன் பணம் தர மறுக்கிறான். கோர்ட்டில் வழக்குப் போடலாமா?" என ஒரு கேள்வி கேட்பான். போடு என்றாலும், வேண்டாம் என்றாலும் இரண்டு விதமான துன்பங்கள் வந்து சேரும். அதுவும் அவனிடமிருந்தும், அவனது எதிரியிடமிருந்தும் பல உரு வெடுத்து வரும். இறுதியில் அவைகளை எதிர்த்துப் போராட வேண்டிய நிலை உனக்கே ஏற்பட்டுவிடும். ஆகவே, இப்படிப் பட்ட சமயங்களில் உனது விடை "நன்றாக யோசித்துச் செய்யுங்கள்" என்றிருப்பது நன்மை பயப்பதாக விருக்கும்.