பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மகாவித்வான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை
அவர்கள்
அணிந்துரை


மலர்கள் (பலவகை, அவற்றுட் சில, அழகுமட்டும் கொண்டு, காண்பார் கண்களைக் கவரும்; சில குறைந்த அழகும் நிறைந்த மணமும் உடையவாய்க் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும். அழகும் சுவையும் மணமும் ஆய்வதில் அருந்திறன் வாய்ந்தவை தேனீக்கள். அவை, “இணரூழ்த்தும் நாறா மலர்"களை நாடாது, கண்ணைக் கவர்ந்து சுவையும் மணமுமுள்ள தேன் விருந்தளிக்கும் மலர்களையே நாடிச்சென்று தாம் பெறும் தேனின்பத்தைப் பிறரும் பிறவும் பெற விழைவனபோலத் தேனைப் பதமுறச் செய்து உதவும் பண்பு வாய்ந்தவை.

நல்லறிஞரும் தேனியனையர்; தாம் தேர்ந்து பயின்ற நன்னூற் பொருள்களை வகைப்படுத்திச் சின்னூலுணர்ந் தாரும் கற்றுப் பயன்பெறும் வகையில் நூல் வடிவாக்கித் தருபவர். முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதரும் அத்தகைய அறிஞர் குழுவைச் சார்ந்தவர். அவர் தரும் நூல்கள் அறிவின் களஞ்சியம் எனலாம்; தெவிட்டாத தேன்பிலிற்றும் தேனடை எனினும் இழுக்காது.

செல்வத்தின் வகையைச் சிறக்க விளக்கும் இச் சிறுநூல், கி. ஆ. பெ. வி. யின் கலை நலங்கனிந்து விளங்குவது; பலவகைக் கருத்துக்களைச் சில பக்கங்களில் தெள்ளிதின் விளக்குவது; உருவிற் குறியதாயினும், உறு பயனளிப்பதில் 'தானே உவமை தனக்கு.' பயன்பெற விழையும் பண்புடையார் படித்துச் சுவைத்துப் பயனடைக!

விசுவநாதரின் வியன் தமிழ்த் தொண்டும்
விரிவுடை மனமும் வளர்க! வாழ்க!

தமிழகம் }

மே. வீ. வே. பிள்ளை

2-8-’64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/5&oldid=1110849" இலிருந்து மீள்விக்கப்பட்டது