பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

7

கல்லாதவன் முன்னே கற்றவரை வைத்து ஒப்பு நோக்குதல் எங்கும் எப்போதுமில்லை.

விதைக்காதபோது விளைவும், சமைக்காதபோது உணவும், உழைக்காதபோது பலனும் இல்லாததுபோல கல்லாதபோது சிறப்பும் இல்லை.

தோண்டாத மணலுக்குள் நீர் மறைந்திருப்பது போலக் கல்லாதார் உள்ளத்தில் அறிவும் மறைந்திருக்கிறது. தோண்டத் தோண்ட நீர் சுரப்பது போல் கற்கக்கற்க அறிவும் சுரக்கிறது. எந்த அளவிற்குத் தோண்டினாலும் அந்த அளவிற்கு நீர் நிரம்பிக் காணப்படுவது போல, எந்த அளவிற்குக் கற்றாலும் அந்த அளவிற்கு அறிவும் நிரம்பிக் காணப்படும்.

அறிவு இல்லாதவர் என்று எவரும் எங்கும் இல்லை. ஆனால், அதை வளர்த்து ஒளிவீசச் செய்வது இரண்டு. ஒன்று, கல்வி; மற்றொன்று பட்டறிவு (அநுபவம்) பட்டுப் பட்டு அறிவை வளர்க்கப் பல ஆண்டுகள் வேண்டும். ஆனால் கல்வி கற்று அறிவை வளர்க்கச் சில நாட்கள் போதும்.

கல்விச் செல்வம் கடல் போன்று பரந்து விரிந்த தொரு பெருஞ்செல்வம். ஒருவன் வாழ்நாள் முழுதும் படிப்பினும் அதனை முழுதும் பெற்றுவிட முடியாது. இவ்வுலகிலுள்ள மக்களின் கல்விச் செல்வத்தை நூறில் ஒரு பங்கு பெற்றவர் ஆயிரத்தில் ஒருவர்கூட இல்லை எனலாம். "கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு" எனக் கலைமகள் கூறுவதாகத் தமிழ் மகள் கூறுகிறாள்.

பல துறையில் பல நூல்களைப் படிப்பதைவிட ஒரு துறையில் சில நூல்களைப் படிப்பது நல்லது. அவற்றையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/9&oldid=1110852" இலிருந்து மீள்விக்கப்பட்டது