பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றங்கரையினிலே

ஆறும் ஊரும்

பாரத நாட்டிலே ஆறுகள் பல உண்டு. அவற்றுள் கங்கையும் காவிரியும் புலவர் பாடும் புகழுடையனவாகும். வடமலையிலே பிறப்பது கங்கை, குடமலையிலே பிறப்பது காவிரி. இவை இரண்டும் இறை மணம் கமழும் திருநதிகள். இத்தகைய ஆறுகளின் பண்பறிந்து பாட்டிசைப்பான் கவிஞன். பயனறிந்து வழிபடுவான் உழவன்.

காவிரி யாற்றின் கருணையால் சோழ நாடு வளநாடாயிற்று; பசியென்னும் தீப்பிணியை மாற்றும் பழனத் திருநாடாயிற்று.

“உழவர் ஒதை, மதகோதை

உடைநீர் ஒதை, தண்பதம்கொள் விழவர் ஒதை சிறந்தார்ப்ப

நடந்தாய், வாழி காவேரி” என்று சிலம்பு பாடிற்று. காவிரிக் கரையிலே ஏர் அடிக்கும் உழவரது ஒசையும், மடையிற் பாய்ந்து, தடைகளை உடைத்து ஒடும் தண்ணிரின் ஒசையும், புது வெள்ளத்தில் நீராடி மகிழும் மாந்தரின் ஒசையும் கலந்தெழுந்த பேரோசையை அழகுறப் பாடினார் இளங்கோவடிகள். இத்தகைய முழக்கத்தின் இடையே அமைதியாகக் கண் வளர்கின்றார் திருமால்.