பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. கும்பகோணம்

சோழவள நாட்டிலே சாலச் செழுமையுற்று விளங்கும் நகரம் கும்பகோணம் குடமூக்கு என்பது அதன் பழம் பெயர். பன்னிரண்டு நூற்றாண்டு முன்னே எழுந்த பைந்தமிழ்ப் பாசுரங்களில் குடமூக்கு என்று பாடப் பெற்றுள்ள ஊர் எவ்வாறு கும்பகோணம் ஆயிற்று என்பது அறியத் தக்கதாகும்.

தமிழ் நாட்டில் பெயர் மாறிய பழம்பதிகள் சில உண்டு. காவிரியாற்றின் கரையிலுள்ள மயிலாடுதுறை என்ற ஊரின் பெயர் மாயவரம் எனச் சிதைந்தது. மணிமுத்தா நதியின் கரையிலே திகழ்கின்ற விருத்தாசலம் என்னும் திருநகரம் முன்னாளில் முதுகுன்றம் என்ற பெயர் பெற்றிருந்தது.

“ முத்தா றுடைய முதல்வர்

கோயில் முதுகுன்றே “

என்று அத் தலத்தைப் பாடினார் திருஞானசம்பந்தர். முதுகுன்றம் என்ற தமிழ்ப் பெயர் வடமொழியில் விருத்தாசலம் ஆயிற்று.

சோழ மண்டலக் கரையில் இப்பொழுது வேதாரண்யம் என்று வழங்கும் ஊர் முன்னாளில் மறைக்காடு என்னும் பெயர் பெற்றிருந்தது. அவ்வூரில் கோயில் கொண்ட ஈசனை, மறைக்காடுறையும் மணாளன்” என்று பாடினார் ஓர் அருட் பாவலர்,