பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு ஆப்படி - - 136

கிடந்த புல்லை வெட்டிக் கொணர்ந்து அவற்றின் முன்னே இட்டான். மண்ணியாற்றின் துறையிலே மாசற நீராட்டிப் பசுக்களைக் கண்ணினைக் காக்கும் இமை போல் கண்காணித்தான்.

நாளடைவில் மந்தை செழித்தது; அவன் சிந்தை திளைத்தது. கருனை வடிவாகிய இளைஞனைக் காணுந் தோறும் பசுக்களின் அன்பு சிறந்தது; பால் சுரந்து நிலத்தில் பாய்ந்தது. இவ்வாறு மண்ணிற் கலந்து பாழாகும் பசுவின் பாலை மாதேவன் பூசைக்குப் பயன்படுத்த ஆசையுற்றான் அப் பையன். உடனே ஆற்றங்கரையில் நின்ற ஆத்தி மரத்தின் அடியில் மணலால் ஓர் உருவம் அமைத்தான்; மண்ணால் அதைச் சுற்றிக் கோயிலும் மதிலும் எடுத்தான்; பசுக்கள் சொரிந்த பாலைக் குடங்களில் ஏந்திப் பரம்பொருளை முழுக்காட்டி, இன்ப வெள்ளத்தில் மூழ்கினான். இவ்வாறு நாளும் ஈசனார்க்குப் பால் முழுக்கு நடைபெற்றது.

இச் செய்தியைக் கேள்வியுற்ற சேய்ஞலூர் மாந்தர் சீற்றமுற்றார். பசு மேய்ப்பதாகச் சொல்லிப் பாலைக் கறந்து மணலிற் கொட்டிப் பாழாக்குகிறான் விசாரசருமன் என்று அவன் தந்தையிடம் குறை கூறினர். மைந்தன் செய்கை கேட்ட தந்தை மனம் வருந்தினான். சிறியவன் செய்த குற்றத்தைப் பொறுத்தருளுமாறு பணிந்து வேண்டினான்.

மறுநாள் மறைவாக மாட்டு மந்தையைப் பின் தொடர்ந்தான் தந்தை மைந்தன் அறியாமல் ஒரு மரத்தில் ஏறி ஒளிந்திருந்தான்; வழக்கம்போல் பசுக்களை மேயவிட்டு மண்ணியாற்றில் நீராடினான் அவ் விளைஞன், மெல்லிய மலர்களும் தளிர்களும் கொய்தான்; பசுக்கள் சொரிந்த பாலைக் குடங்களில் நிறைத்தான். மணலைக் குவித்து, மாதொரு பாகனாகப் பாவித்து, ஒருமையுடன் இருந்து வழிபாடு செய்யத் தலைப்பட்டான்.