பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைக்கல மாதா 440

காத்த காரணத்தால் அப் பெயர் அவ்வூருக்கு அமைந்தது என்று புராணம் கூறும் அமரர் தலைவனுக்கு அடைக்கலம் அளித்த புகலியைத் தன்னகத்தேயுடைய சோழ நாட்டின் சீர்மை எந்நாட்டிலும் பரவிற்று புகலியிலே பிறந்து நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தர்ைப் புகலியர்கோன் என்று தமிழகம் போற்றிப் புகழ்ந்தது.

இங்ஙனம் அடைக்கலத்தின் பெருமையை அறிந்து போற்றும் தமிழ் நாட்டில் அடைக்கல மாதா வின் திருக் கோவில் ஒன்று இருநூறு ஆண்டுகளுக்கு முன்னே எழுந்தது.அக்கோவிலை நிறுவியவர் இத்தாலிய தேசத்தைச் சேர்ந்த வித்தகர்; பெஸ்கி என்னும் இயற்பெயர் உடையவர். தமிழ் நாட்டில் சேசு மதத்தைப் பரப்ப வந்த அப்பெரியார் தமிழ் மொழியை நன்றாகக் கற்றார்; தமிழனைப் போலவே நடையும் உடையும் கொண்டு வாழ்ந்தார். தமிழ் மொழிக்குச் சிறந்த தொண்டு செய்த அவ் அறிஞரை. வீரமாமுனிவர் என்றும், தைரியநாத சுவாமி என்றும் புகழ்ந்து மகிழ்ந்தது தமிழகம்.

அம்முனிவருடைய ஆர்வத்தால் கொள்ளிட நதியின் வடகரையில் உள்ள ஏலாக் குறிச்சியில் தேவமாதாவின் திருக்கோவில் எழுந்தது. அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்புரியும் தேவமாதாவுக்கு அடைக்கலமாதா என்று பெயரிட்டனர் முனிவர். கண்ணினைக் காக்கின்ற இமைபோல் மெய்யடியாரைக் காத்தருளும் அடைக்கல மாதாவின் அருட்காவலில் அமைந்த தலத்திற்குத் திருக்காவலூர் என்னும் பெயர் அளித்தார்.

கொள்ளிட நதிக்கரையிலே, தண்ணறுஞ்சோலையின் நடுவே அமைந்த திருக்கோவிலில் கருணைபொழியும் கண்களோடு, மின்னார் முடி புனைந்து, அங்கையில் மணிவடம் தாங்கி அடைக்கல மாதா காட்சி தருகின்றாள். அவ் அருட்கோலத்தைக் கண்டு அகம் குளிர்ந்து பாடினார் வீரமாமுனிவர்