பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. புதுவை மாநகர்

தமிழகத்தில் புதுவை மாநகரம் ஒரு சிறந்த துறைமுகம். கலங்கள் இயங்கும் அந் நகரில் நலங்கள் பல உண்டு. “இம்மென்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்” என்னும் கொடுங்கோலாட்சியால் நலிவுற்ற பாரத நாட்டு நல்லறிஞர்க்குப் புகலிடமாய் நின்றது. புதுவை மாநகரம். ஆங்கில அரசாட்சியின் கொடுமைக்கு ஆற்றாது வெளிப்பட்ட வங்க நாட்டு ஞானச் செல்வராகிய அரவிந்தரை அடைக்கலப் பொருளாக ஏற்று ஆதரித்த பெருமை வாய்ந்தது அந் நகரே ! ‘பாட்டுக்கொரு புலவன்’ என்று தமிழ் நாட்டார் பாராட்டும் பாரதியாருக்குப் பல்லாண்டு புகலிடம் அளித்துப் பெருமை பெற்றதும் அந் நகரே !

இத்தகைய புகழ் பெற்ற புதுவை மாநகரில் இரு நூறாண்டுகளாகப் பிரெஞ்சு அரசாங்கம் ஆட்சி புரிந்தது. அவ்வாட்சியாளருள் தலைசிறந்தவர் டுப்பிளே என்று வரலாற்று அறிஞர் கூறுவர். அவருடைய உருவச்சிலை புதுவைக் கடற்கரையில் இன்றும் நின்று அணி செய்கின்றது:

புதுவை மாநகரில் அவர் ஆட்சி புரிந்த காலத்தில் தமிழ்ப் பெருமகன் ஒருவர் அங்கு தழைத்து வாழ்ந்தார். ஆனந்த ரங்கப்பிள்ளை என்பது அவர் பெயர். சென்னைக்கு அருகே யுள்ள பிரம்பூரிலே தோன்றிய ஆனந்த ரங்கர் இளமையிலே புதுவையம்பதியை அடைந்தார்;