பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. பாண்டி நாடு

“உலகு புரந்து ஊட்டும் உயர் பேரொழுக்கத்துப்

புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி வையை யென்ற பொய்யாக் குலக்கொடி’

சிலப்பதிகாரம் 28. மதுரை மாநகரம்

சங்கத் தமிழ்மாலை பெற்ற ஆறுகளுள் தலை சிறந்தது வையை ஆறு. அந்நதியின் துறைகளிலே முன்னாளில் முத்தமிழ் வளம் கொழித்தது; அதன் தெள்ளிய அலைகளிலே தமிழ் ஏடு தவழ்ந்தது. எண் குணத்தவனாகிய ஈசன் அவ் வாற்றின் கரையிலே மண் சுமந்து பணி செய்தான்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வையை ஆற்றின் கரையிலே வீற்றிருக்கின்றது. மதுரை மாநகரம். அதுவே பழம் பதியாகிய பாண்டி நாட்டின் தலைநகரம். தொன்றுதொட்டு முத்தமிழையும் முறையாகப் பேணி ‘வளர்த்த பெருமை அந்நகரத்திற்கே உரியதாகும். பாண்டியர்கள் அங்கு நிறுவிய தமிழ்ச் சங்கம் ஒர் அறிவுக் கருவூலமாகத் திகழ்ந்தது. சங்கப் புலவர்கள் மதுரை மாநகரின் நல்லணியாக விளங்கினார்கள். பிற நாட்டுத் தமிழறிஞர்களையும் வரிசை யறிந்து பேணினர் பாண்டியர். அதனால் நல்ல தமிழ் பாண்டி நாடெங்கும் பரவுவதாயிற்று.