பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 ஆற்றங்கரையினிலே

கலங்காத மனத் திண்மை வாய்ந்தவர். முத்தமிழால் வைதாரையும் வாழ்விக்கும் முருகவேள் கோயில் கொண்டு அருள் புரியும் படை வீடுகளின் பெருமையைத் தமிழகத்தார் அறிந்து உய்யுமாறு திருமுருகாற்றுப்படை பாடினார் அப்புலவர் பெருமான். -

பொய்யறியாப் புலவர் என்று புகழப்பெற்ற சங்கப் புலவர்கள் மதுரை மாநகரின் அமைப்பையும் சிறப்பையும் அழகாகப் பாடியுள்ளார்கள். செந்தாமரை மலர் போன்றது அந்நகரம் என்றார் ஒரு கவிஞர். தாமரையின் பொகுட்டுப் போல் அமைந்தது திரு ஆலவாய் என்னும் கோயில்; அதைச் சுற்றி அடுக்கடுக்காக உள்ள நகர வீதிகள் அம்மலரின் அழகிய இதழ் போன்றன. அம்மாநகரில் மனையறம் புரிந்த மக்கள் தாமரைப் பூவின் மகரந்தம் போன்றனர். மகரந்தத்தை நாடி வரும் வண்டினம் போல் மதுர கீதம் பாடி வந்து மதுரையாரிடம் பரிசு பெற்றனர் இரவலர் என்று பரிபாடல் கூறுகின்றது.

இத்தகைய மதுரையம்பதியில் சில காலம் அமைச்ச ராயிருந்து பாண்டி நாட்டுக்குப் பெரும்பணி செய்தார் மாணிக்கவாசகர். அவர் கலை ஞானமும் சிவ ஞானமும் பெற்ற சிலர். மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பொருளைக் கொண்டு ஈசனார்க்குக் கோயில் கட்டினார். அதை அறிந்த அரசன் சீற்றம் கொண்டான்; தவறிழைத்த அமைச்சரைச் சிறைக் கோட்டத்தில் அடைத்தான்; பலவாறு துன்புறுத்தினான். தனக்குவமையில்லாத் தலைவனைத் தஞ்சம் அடைந்த மாணிக்கவாசகர் மனக் கவலையற்றுச் செஞ்சொற் கவிபாடிச் சிறையிருந்தார்’

அவர் பொருட்டு ஈசனார் ஒரு திருவிளையாடல் புரிந்தார். காட்டு நரிகளைப் பெரிய பரிகளாக்கிப் பாண்டியனிடம் சேர்த்தார். இவ் அற்புதத்தைக் கண்டு ஆனந்தக் கண்ணிர் சொரிந்தார் மாணிக்க வாசகர்.