பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை மாநகர் - 160

“ ஆடல் புரியும் அரன்என்றும் மூவர்தமிழ்ப் பாடல் புரியும் பரன்என்றும் கூடலிலே நன்னரிவா சிக்கு நடைபயிற்றி னோன்என்று கின்னரிவா சிக்கும் கிளி”

என்ற அருமையான பாட்டிலே ஆலவாயான் பெருமை அழகுற விளங்குகின்றது. ஆடல் புரிவான் எங்கள் அரசன் என்று பேசும் ஒரு கிளி; தேவாரப் பாடல் கேட்பான் எங்கள் பரன் என்று தித்திக்கப் பேசும் மற்றொரு கிளி; நரியைப் பரியாக்கி நடையும் பயிற்றுவான் எங்கள் நாதன் என்று நவிலும் இன்னொரு கிளி. இவ்வண்ணம் ஈசன் புகழைப் பேசிய கிளிக் குலம் இன்றும் திரு ஆலவாயிலில் வாழ்கின்றது. கிளி மண்டபத்தில் உள்ள பச்சைக் கிளிகளும், பஞ்சவர்ணக் கிளிகளும், வெள்ளைக் கிளிகளும் மற்று முள்ள கிள்ளைகளும் மீனாட்சியம்மையின் திருப்பெயரை இசையினும் இனிய மழலை மொழியால் பேசும் பொழுது அன்பர் செவிகளில் இன்பத் தேன் வந்து பாய்கின்ற தன்றோ !