பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. திருநெல்வேலி

தென் தமிழ் நாடு என்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயும் காதினிலே, இந்நாட்டிலே சிவனருள் சிறந்தது; திருவாய் மொழி பிறந்தது; எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய ஈசனை,

“ தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லற் பிறவி அறுப்பானே.”

என்று திருவாசகம் ஒலமிட்டு அழைத்தது.

இத்தகைய தென்பாண்டி நாட்டின் தலைநகரம் நெல்லை மாநகரம். இந்நகரின் பழம் பெருமையைப் பாடினார் நல்லியற் கவிஞராகிய ஞானசம்பந்தர். திருநெல்வேலிக்கு அவர் எழுந்தருளியபோது தமிழ்த் தென்றல் வரவேற்றது. அப் பூங்காற்றின் இனிமையை துகர்ந்த இளங்கவிஞர், தென்றல் வந்துலாவிய திருநெல்வேலி என்று உள்ளம் குளிர்ந்து பாடினார்.

நெல்லை மாநகரின் நல்லனியாகத் திகழ்வது நெல்லையப்பர் திருக்கோவில், அக்கோயிலைச் சுற்றி மாட வீதிகள் உண்டு. மாடம் என்னும் சொல் கோவிலைக் குறிக்கும். வஞ்சி மாநகரத்தில் திருமால் பள்ளி கொண்டிருந்த ஆடக மாடம் என்னும் திருக்கோயிலின் பெயரும் தான்தோன்றி மாடம், துங்கானை மாடம் முதலிய பாடல் பெற்ற சிவாலயங்களின் பெயரும் இதற்குச் சான்றாகும். நெல்லை மாநகரின் மாட வீதிகளைச் சுற்றி நான்கு ரத வீதிகள் நன்கு அமைந்துள்ளன. .