பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 ஆற்றங்கரையினிலே

நெல்லையில் உள்ள சில தெருக்களின் பெயர்கள் நல்ல தமிழாட்சிக்கு ஒர் எடுத்துக் காட்டாகும். கூழைக் கடைத் தெரு என்பது ஒரு தெருவின் பெயர். குறுகிய தெருவாய் இருத்தலால் அப்பெயர் அதற்கு அமைந்தது என்று பொது மக்கள் கருதுகின்றார்கள். உண்மையில் அத்தெருவின் பெயர் கூலக்கடைத்தெரு என்பதாகும். கூலம் என்பது ஒரு பழைய தமிழ்ச் சொல். உணவுப் பொருள்களாகிய நெல் புல் முதலிய பதினெட்டு வகைத் தானியங்களை விற்கும் கடை கூலக்கடை என்று முன்னாளில் வழங்கிற்று. மதுரையம்பதியில் கூலக்கடை வைத்து வாணிகம் செய்த புலவராகிய சாத்தனார் கூலவாணிகன் சாத்தனார் என்று குறிக்கப்படுகின்றார். சோழ நாட்டின் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினத்தில் கூலம் குவித்த கூலவீதி ஒன்று இருந்ததென்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. கூலவீதி என்பதற்குக் கூலக் கடைத்தெரு என்றே பொருள் கூறிப் போந்தார் சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார். எனவே பழங்காலத்தில் பழகு தமிழில் வழங்கிய கூலக்கடைத்தெரு என்ற பெயரை இன்றளவும் பாதுகாத்து வைத்திருப்பது நெல்லை மாநகரமேயாகும்.

பாண்டிய மன்னர்கள் தென்னாட்டை ஆண்ட காலத்தில் அரசாங்கத்திற்குரிய வரிப் பணத்தைக் காலத்தில் செலுத்தத் தவறிய குடிகள் காவற்புரையில் அடைக்கப் பட்டார்கள். வரிப் பணத்தைக் கொடுத்துத் தீர்க்கும் வரை அவர்களை அங்கே வைத்துக் காவல் செய்வது வழக்கம். இத்தகைய காவற்புரையொன்று நெல்லையம்பதியில் இருந்தது. அக் காவற்புரையிருந்த தெரு காவற்புரைத் தெரு ‘ என்று பெயர் பெற்றது. நாயக்க மன்னரின் ஆணையால் காவை வடமலையப்பன் என்பவர் நெல்லை நாட்டில் ஆட்சி புரிந்த காலத்தில் தென் திருப்பேரை யென்னும் ஊரைச் சேர்ந்த பரம வைணவர் இருவர் அக் காவற்புரையில் அடைக்கப்பட்டார்கள். அவ்விருவரும்