பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குற்றாலம் 182

பழங்களை ஒவ்வொன்றாகப் பறித்தது; உரித்தது; தின்றது; தின்று கொண்டேயிருந்தது.

சிற்றாற்றின் கரையிலே சித்திர சபை என்னும் சிறந்த மன்றம் ஒன்று உள்ளது. ஈசன் திரு நடம் புரியும் பஞ்ச சபைகளில் அதுவும் ஒன்று. “ கூற்றுவன் வரும்பொழுது உற்றாரும் உறவினரும் உறு துணையாகார் குற்றாலத் துறையும் கூத்தனே உற்ற துணையாவார் ” என்று அறிவுறுத்தினர் ஆன்றோர்.

“ உற்றார் யாருளரோ

உயிர்கொண்டு போம்பொழுது குற்றாலத் துறைகூத்தன்

அல்லால் நமக்கு - உற்றார் யாருளரோ” என்று திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற கூத்தன் கோவில் இன்றும் குற்றாலத்தில் காட்சி தருகின்றது.

இயற்கை வளம் மலிந்த திருக்குற்றாலத்தின் இளங் காற்றிலே உள்ளே இன்ப சுகம் வேறெங்கும் காண்டல் அரிது. மந்தமாருதம் என்னும் அம் மெல்லிய பூங்காற்று நலிவுற்ற உடலுக்கு நன்மருந்து; இயற்கையன்னை அளிக்கும் இணையற்ற விருந்து,

திருக்குற்றாலத்தின் சிறப்பைக் கற்றாரும் மற்றாரும் அறியக் காட்டுவது குறவஞ்சி நாடகம். சிங்கன் என்ற குறவன் வேட்டையாடப் புறப்படுகிறான்; பாங்கான ஒர் இடத்தில் வலையை விரித்துப் பக்கத்தில் உள்ள புதரில் பதுங்கியிருக்கிறான்; அவன் எண்ணியபடியே பறவைகள் வலையில் அகப்படுகின்றன.

“ தேசத்துக் கொக்கெல்லாம்

கண்ணிக்குள் ளேவந்து சிக்குது பார்,கறி தக்குதுபார்”