பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார் திருநகரி 198

அசோக மரத்தடியில் அமர்ந்த அருகர் போலவும் புளியமரத்தடியில் அமர்ந்த புனிதராகிய மாறனைக் குருகையார் வியந்து புகழ்ந்தனர்.

இவ்வண்ணம் பதினாறாண்டுகள் வாழ்ந்த மாறன் பெருமையை உலகறியச் செய்தவர் ஒர் அருட் பெருஞ் செல்வர். அவர் திருக்கோளுர் என்னும் சிற்றுாரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர்; இளமையிலேயே செவிச் செல்வம் பெற்றுச் சிறந்தவர். அவர் பாடிய செஞ்சொற் கவிதையின் சுவை அறிந்த சான்றோர் அவர்க்கு மதுர கவி’ என்னும் கலைப்பட்டம் சூட்டினர்.

இத்தகைய சீர்மை வாய்ந்த நல்லார் புளிய மரத்தடியிற் போந்து மாறன் திருமேனியைக் கண்டார். ஞானச் சுடரொளியாய் விளங்கிய அப் பெருமானைத் தம் குருநாதனாகக் கொண்டார். அவர் திருவாய் மலர்ந்து அருளிய திருப்பாசுரங்களைப் பண்ணோடு பாடிப் பரவசமுற்றார். தமிழ் நாடெங்கும் அப் பாசுரங்களைப் பாடி அடியார் மனத்தை மகிழ் வித்தார். அப்பணி புரியுமாறு தம்மை ஆட்கொண்ட மாறனைத் தெய்வ மாகவே கருதி வழிபட்டார்.

“ தேவு மற்றறியேன் குருகூர் நம்பி

பாவின் இன்னிசை பாடித் திரிவனே.”

என்பது அவர் திருவாக்கு.

தென்னாட்டில் வைணவ சமயத்தைப் பேணி வளர்த்த பெருமக்கள் ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுவர். பன்னிரு ஆழ்வார்கள் பண்ணார்ந்த பாட்டிசைத்து, தமிழ் நாடெங்கும் தெய்வ மணம் கமழச் செய்தனர். அன்னவருள் தலைமை சான்றவர் குருகை மாறன் என்பது ஆன்றோர் கொள்கை. அவருடைய திருவாய்மொழி முதலிய திருப்பாசுரங்கள் தெள்ளிய மறைமொழிகளாகத்