பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. கொற்கை மாநகரம்

பாரத நாட்டில் உள்ள இமயமலையும் பொதிய மலையும் புலவர் பாடும் புகழுடையனவாகும். சந்தனச் சோலை சூழ்ந்த பொதிய மாமலையில் செந்தமிழ் முனிவன் என்றுமிருந்து தமிழகத்தைக் காத்தருள்கின்றான் என்று பாடுவர் செஞ்சொற் புலவர்.

பொன் மலையும் வெள்ளி மலையும் காட்சி தரும் இந் நாட்டில் பொதிய மலைக்கு ஒரு தனிப்பெருமை உண்டு. சீரிளமைத் திறம் வாய்ந்த செந்தமிழின் திருவுருவாகவே திகழ்கின்றது அம்மலை. அதனால் மலையம் என்னும் பொதுப் பெயர் அதற்கே சிறப்பாக உரியதாயிற்று:

இத்தகைய பெருமை சான்ற மலையில் பிறக்கும் பேறு பெற்றது பொருனை என்னும் திருநதி, தென் தமிழ் நாடாகிய நெல்லை நாட்டுக்கே உரிய அந்நதி கடலொடு கலக்குமிடத்தில் கொற்கை என்னும் துறைமுக நகரம் முன்னாளில் சிறந்து விளங்கிற்று. குமரித்துறைக்கும் கோடிக் கரைக்கும் இடையே அமைந்த கொற்கை மாநகரை நாடிவந்தனர் பிறநாட்டு வணிகர். நவமணிகளுள் ஒன்றாகிய நல்முத்து கொற்கைக் கடலில் வளமுற விளைந்தது.

தென்பாண்டி நாட்டில் முத்து விளையும் துறைகளை எல்லாம் தொகுத்துப் பாடியுள்ளார் ஒரு பெருங் கவிஞர்.

“கோடும் குவடும் பொருதரங்கக்

குமரித் துறையில் படுமுத்தும்