பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 - ஆற்றங்கரையினிலே

யாருக்கு ஒரு கோவில் அமைத்து அதனருகே குடியிருந்தார்கள். அன்று அவர்கள் வகுத்த “அக்கசாலைப் பிள்ளையார் தெரு’ இன்றும் நெல்லையம்பதியிலே காணப்படுகின்றது. .

நெல்லை நாட்டின் பழைய வரலாற்றை ஆராய்ந்து எழுத ஆசைப்பட்டார், மேலை நாட்டு அறிஞராகிய கால்டுவெல் ஐயர். நெல்லை நாட்டைத் தம் தாயகமாகக் கொண்டு ஐம்பதாண்டுகள் இடையன்குடி என்னும் சிற்றுாரில் வாழ்ந்து, மெய்வருத்தம் பாராது உழைத்துத் தமிழ் மொழியின் தொன்மையினையும் செம்மையினையும் ஆராய்ந்து வெளிப்படுத்தினார் இவ் அறிஞர். தமிழகத்தில் பாண்டி நாடே பழம்பதி என்றும், பசுந்தமிழை வளர்த்த பெருமை பாண்டியர்க்கே சிறப்பாக உரியதென்றும் நன்கு உணர்ந்த கால்டுவெல் ஐயர் மேலைநாட்டு நல்லறிஞர் நூல்களில் குறிக்கப் பெற்ற கொற்கைத் துறைமுகத்தைத் துருவிப் பார்க்கத் தொடங்கினார். கடற்கரையை விட்டு ஐந்து ன்மல் தூரம் விலகிச் சீரும் சிறப்பும் இழந்து நின்ற சிற்றுாராகிய கொற்கை முற்காலத்தில் ஒரு துறைமுக நகரமாக இருந்திருத்தல் கூடுமோ என்று ஐயுற்றார். அவ்வூரிலே சென்று ஆராய்தல் இன்றியமையாதது என்று எண்ணினார். சில கூலியாள்களை அமர்த்திக்கொண்டு கொற்கையூருக்குச் சென்றார்.

வெள்ளையர் ஒருவர் விறுவிறுப்பாக வருவதையும் அவர் பின்னே வேலையாள்கள் கடப்பாரை முதலிய கருவிகளைத் தாங்கி நடப்பதையும் கண்ட கொற்கை வாசிகள் மனம் பதைத்தார்கள். தம் முன்னோர் பாடுபட்டுத் தேடிக் கொற்கையம்பதியில் புதைத்து வைத்திருந்த பொன்னையும் பொருளையும் பெயர்த்து எடுத்துச் செல்லும் கருத்தோடு வெள்ளையர் ஒருவர் புறப்பட்டு வந்தாரென்று எண்ணினார்கள்: கூட்டங் கூட்டமாக நின்று எட்டியும் சுட்டியும் பேசினார்கள். அவர்களுள் ஒருவர்