பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. காயல் மாநகரம்

ஏறக்குறைய அறுநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னே பாண்டி நாட்டிற்கு வந்தார் ஓர் இத்தாலிய மேதை. அவர் பல நாடு கண்டவர்; மார்க்கோ போலோ’ என்னும் பெயருடையவர். அவர் வந்த காலத்தில் சுந்த பாண்டியன் மதுரையில் அரசு வீற்றிருந்தான். அவன் உடன் பிறந்தவர் நால்வர் அவர் பாண்டி நாட்டின் பல பகுதிகளில் ஆட்சி புரிந்தனர்.

மார்க்கப் போலோ, தாம் கண்ட காட்சிகளையும் கேட்ட செய்திகளையும் முறையாக எழுதி வைத்தார். பாண்டி நாட்டின் பண்பாட்டையும், பழக்க வழக்கங் களையும் அவர் எழுதிய குறிப்புகளால் நன்கு அறிந்து கொள்ளலாம்.

அவர் வந்த காலத்தில் கொற்கைத் துறைமுகம் தூர்ந்து போயிற்று. குணகடல் அதைவிட்டு நெடுந் தூரம் விலகி நின்றது. பொருனை யாற்று முகத்தில் அமைந்த காயல்’ என்னும், துறையில் அலைமோதிக் கொண்டிருந்தது. அத்துறைமுகத்தில் தலையெடுத்து நின்ற காயல் நகரத்தை அவர் சுற்றிப் பார்த்தார். அதன் பரப்பும் சிறப்பும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. பெருமையும், மேன்மையும் வாய்ந்த நகரம் என்று அந்நகரத்தைப் பாராட்டியுள்ளார் அவ் அறிஞர்.

அயல் நாடுகளிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்யும் வழக்கம் தமிழகத்தில் நெடுங்காலமாக உண்டு.