பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயத்தாறு 224

நோக்கி, நீங்கள் சொல்வது சரியன்று ஆலம் குடித்த ஈசனை ஆலம் குடியான்’ என்று சொல்லலாமா?

“ஆலங் குடியானை ஆலாலம் உண்டானை

ஆலங் குடியான்என்று ஆர்சொன்னார் - ஆலங் குடியானே யாயின் குவலயத்தோர் எல்லாம் மடியாரோ மண்மீதி லே “ ‘ஆலம் தான் உகந்து அமுது செய் தானை’ என்பது ஆன்றோர் திருவாக்கன்றோ ? ஆலம் குடித்ததனால் அன்றோ அப் பெருமானது கண்டம் கறுத்தது? நீலகண்டன் என்ற பெயரும் எழுந்தது? அவன் கண்டத்தில் அமைந்த கருமையான அடையாளத்தைக் கண்டும் ஆலம் குடியான் என்று அழைத்தல் ஆகுமா? இவ்வுலகத்தை யெல்லாம் அழித்து முடிப்பதற்கு எழுந்த ஆலகாலம் என்னும் கொடிய நஞ்சை அவ் வள்ளல் அள்ளிக் குடித்ததனால் அன்றோ இன்று மாந்தர் மண்ணுலகில் வாழ்கின்றார்கள்? ஆலம் குடித்தான் என்பதற்கு இவ்வுலகமே சான்றாயிருக்க, ஆலம் குடியான் என்று அவனை அழைத்தல் மெய்யாகுமோ என்று நயம்பட உரைத்தார். -

இக்கவிஞர் பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையைக் கடந்து நெல்லையம்பதிக்குச் செல்லும் வழியில் மற்றொரு சிற்றுாரை அடைந்தார். அன்று காலையிலிருந்து அவர் பசியால் நலிந்து வெயிலால் உலர்ந்து வாடித் தளர்ந்திருந்தார். அந்தி மாலையில் அவ்வூரில் எழுந்த மேளதாளமும் ஆரவாரமும் அவர் உள்ளத்தில் ஆனந்தம் ஊட்டின. வயிறார உணவு கிடைக்கும் என்ற எண்ணமும் பிறந்தது. ஆற்றங்கரையில் இருந்த பெருமாள் கோவிலில் அன்று ஒரு திருநாள். வீதி யெங்கும் கொடிகள் பறந்தன; வீடுதோறும் கோலங்கள் விளங்கின; காளமேகம் உள்ளம் குளிர்ந்து கோவிலின் உள்ளே சென்றார். பெருமாளைக் கருட வாகனத்தில் ஏற்றி மாலைகளையும் நகைகளையும் அணிவித்துக் கொண் டிருந்தார் ஆலயக் குருக்கள்.