பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



V. நாஞ்சில் நாடு

“ வஞ்சிநா டதனில் நன்செய் நாடெனச்
செந்தமிழ் வழங்கும் தேயம்ஒன் றுளது, அதன்
அந்தமில் பெருவளம் அறியார் யாரே !”

- மனோன்மணியம்

41. கோட்டாறு

ஆன்ற பெருமையுடைய தமிழ் நாட்டில் ‘மூன்று’ என்ற எண் மிக அருமையாகப் போற்றப்பட்டு வருகின்றது; உலகம் மூன்று; தமிழ் மூன்று; தேவரில் சிறந்தவர் மூவர்; தமிழ் நாட்டு முடிமன்னர் மூவர்: அன்னார் முடிமேற் கொண்டு பாராட்டிய நூல் முப்பால், இப்பண்பினைக் கண்ட பாவலர் ஒருவர்,

“மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மும்மாவும்
தாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்றோ
பாமுறைதேர் வள்ளுவர் முப்பால்”.

என்று பாடினார். தமிழகத்தில் நாடும் நதியும், மலையும் பதியும், முடியும் கொடியும், முரசும் பரியும் மூன்றாக அமைந்துள்ள முறையினைக் கண்டு முற்றிய உற்றார் அக்கவிஞர். இத்தகைய தமிழகத்தை ஆண்டி மூவேந்தரும் முடிமேல் அணிந்து போற்றும் பெருமை சான்றது முப்பாலாகிய திருக்குறள் என்று அழகுறக் கூறி முடித்தார்.