பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 ஆற்றங்கரையினிலே

தமிழ் நாட்டைக் குறித்து மேலை நாட்டு அறிஞர்கள் எழுதிப் போந்த பழங் குறிப்புகளில் ஆய்நாடு இடம் பெற்றுள்ளது. ஆய்நாட்டிலே உள்ள பெரிய ஊர் கோட்டாறு என்று யவன அறிஞராகிய தாலமி கூறுகின்றார். இந்நாளில் நாஞ்சில் நாட்டின் தலைநகர் போல் விளங்கும் நாகர்கோயிலை யடுத்த கோட்டாறு முன்னாளில் அயல் நாட்டாரும் அறிந்த சிறந்ததோர் நகரமாகத் திகழ்ந்தது என்பதில் ஐயமில்லை.

கோட்டாறு என்பது ஒர் ஆற்றின் பெயர். கோட் டாற்றின் கரையில் எழுந்த ஊர், கோட்டாறு என்று அழைக்கப் பெற்றது. வாட்டாறு, வெள்ளாறு, ஐயாறு முதலிய ஆற்றுப் பெயர்கள் ஊர்ப்பெயர்களாக வழங்குதல் போன்று கோட்டாறும் ஊர்ப் பெயராயிற்று. நாஞ்சில் நாட்டின் வழியாகச் செல்லும் பழையாறு ஆதியில் கோட்டாறு என்று பெயர் பெற்றிருந்தது என்று அறிந்தோர் கூறுவர்.

சேர நாட்டைச் சேர்ந்த கோட்டாறு பாண்டி நாட்டின் எல்லைப்புறத்தில் அமைந்திருந்ததனால் அடிக்கடி தொல்லை யுற்றது; பாண்டியரும் சோழரும் படையெடுத்த காலங்களில் அல்லற்பட்டது. நெடுமாறன் என்ற பாண்டியன் கோட்டாற்றைப் பாழாக்கினான். குலோத்துங்க சோழனும் அந்நகரை வென்று அழித்தான்.

“ முள்ளாறும் கல்லாலும் தென்னர் ஒட

முன்னொருநாள் வாள்அபயன் முனிந்த போரில் வெள்ளாறும் கோட்டானும் புகையால் மூட வெந்தவனம் இந்தவனம் ஒக்கில் ஒக்கும்” என்று சோழ மன்னன் பெற்ற வெற்றிச் சிறப்பைக் கலிங்கத்துப் பரணி பாடிற்று. இவ்வாறு மாற்றார் படையெடுப்பால் எரிந்தும் தகர்ந்தும் நலிவுற்ற நகரம் அழிந்து போகாமல் அன்றுபோல் இன்றும் தலை நிமிர்ந்து நிற்பது நாஞ்சில் நாட்டாரது உறுதிப்பாட்டை நன்கு உணர்த்துவதாகும்.