பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோதாவரித்துறை 244

ஆற்றங்கரையிலே யானைக் கன்றின் நடையைக் கண்ட போது சீதையின் உள்ளத்தில் சிறந்த இன்பம் பிறந்தது. மிதிலை வீதியில் காதலனாகிய இராமன் நடந்த விழுமிய நடையும், பின்பு கானகத்தில் நடந்த கண்ணிய நடையும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து உவகையூட்டின. அதன் அறி குறியாக அவள் முகத்திலும் முறுவல் தோன்றிற்று. இயல் பாகவே மந்தகாசம் தவழ்ந்து கொண்டிருந்த முகத்தில் இப்போது புதியதோர் புன்னகை எழுந்தது. அது செடி கொடிகளிலே மலர்ந்த மலர்போல் அம்மங்கையின் திருமுகத்தில் நின்று அழகு செய்தது.

எனவே இருவர் மனத்திலும் எழுந்த இன்ப உணர்ச்சி ஒன்றே எனினும், இராமன் முகத்தில் அது சிறிய முறுவலாக வெளிப்பட்டது. சீதையின் முகத்தில் அது புதிய முறுவலாகப் பூத்தது. கானகத்தில் கவலையோடு சென்ற தலைவனது மன நிலையையும், அவனுடன் களித்து விளையாடிச் சென்ற சீதையின் மனநிலையையும் அவ்விருவரது முகத்தில் எழுந்த முறுவலின் வாயிலாகப் புலப்படுத்திய கம்பர் கவித்திறம் போற்றுதற்குரியதாகும்.