பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதோட்டம் 256

“மாவும் பூகமும் கதலியும் நெருங்குமா

தோட்டநன் னகர்மன்னித் தேவி தன்னொடும் திருந்துகே தீச்சரத்து இருந்தஎம் பெருமானே”

என்று ஆதரித்து அழைத்தார். பாலாவியாற்றிலே நீராடி, மாதோட்டத்தில் அமர்ந்த மாதொரு பாகனை வழிபடும் பேறு பெற்ற மெய்யடியாரைப் பாடிப் பணிந்தார் சுந்தரமூர்த்தியும்.

எத்திசையும் புகழ்பெற்ற இராசராசன் தமிழ்நாட்டில் அரசு புரிந்த காலத்தில் மகிந்தன் என்னும் மன்னவன் ஈழ நாட்டை ஆண்டு வந்தான். அவன் மாற்றாரோடு உறவு பூண்டான் என்றறிந்த சோழன் சீற்றமுற்றான். உடனே, தமிழ்ப் படை திரண்டு எழுந்தது. இளவரசனாகிய இராசேந் திரன் படைத் தலைமை ஏற்றான். கருங்கடல் கடந்து ஈழ நாட்டில் இறங்கிய தமிழ் வெள்ளத்தைக் கண்டபோதே கலங்கினான் இலங்கை வேந்தன். ஆயினும் சிங்களப் படை சினந்து எழுந்து எதிர்த்தது. கடும் போர் புரிந்தது. இறுதியில் ஈழப்படை தோற்றது; சோழப் படை வென்றது. ஈழமண்டலம் மும்முடிச் சோழன் என்னும் சிறப்புப் பெயருடைய இராசராசனுக்கு உரியதாயிற்று. மும்முடிச் சோழ மண்டலம் என்ற பெயரும் பெற்றது. இவ் வெற்றிச் சிறப்பினை அவன் மெய்க்கீர்த்தி பாடிற்று:

ஈழ மண்டலம் மும்முடிச் சோழ மண்டலம் என்னும் புதுப் பெயர் பெற்றாற் போன்று மாதோட்ட நகரம் இராச ராசபுரம் என்று அழைக்கப் பெற்றது. பாடல் பெற்ற அப் பழம்பதியில் சோழ மன்னன் பெயர் விளங்கும் வண்ணம் தமிழ் நாட்டுத் தலைவன் ஒருவன் ஒரு சிவாலயம் எடுத்தான். அதற்கு இராசராசேச்சரம் என்னும் பெயர் கொடுத்தான். அவ் ஆலயத் திருவிழாவிற்கு நிலங்கள் விடுத்தான். சிவபாதசேகரன் என்று இராசராசன் பெற்ற