பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 ஆற்றங்கரையினிலே

என்ற பாட்டின் பயனாகத் தெள்ளிய சிங்கர் என்ற பெயர் திருவல்லிக்கேணிப் பெருமாளுக்கு அமைந்தது.

தெள்ளிய சிங்கர் என்னும் திருப்பெயர் தெளி சிங்கர் எனக் குறுகி, துளசிங்கர் என மாறி இப்பொழுது வழங்கு கின்றது. துளசிங்கப் பெருமாள் என்பது அவ்விறைவன் பெயராயிற்று.

இன்னும், பாரதப் பெரும் போரில் பார்த்தனது தேர்ப் பாகனாய்ப் பணிசெய்த திருமாலின் கருணையை வியந்து பாடினார் திருமங்கை மன்னன்.

“ பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு

பார்த்தன்தன் தேர்முன் நின்றானை சிற்றவை பணியால் முடிதுறந் தானை

திருவல்லிக் கேணி கண்டேனே”

என்ற பாட்டின் அடியாகப் பார்த்தசாரதி என்ற பெயரும் பெருமாளுக்கு அமைந்தது. திருவல்லிக்கேணியிற் கோயில் கொண்ட திருமாலைத் தேர்ப்பாகனாகக் கனவிலே கண்டு பாடினார் கவிஞர் பாரதியாரும்.

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே முளைத்தது சென்னப் பட்டினம். அங்கே வாணிபம் செய்யப் போந்த ஆங்கிலேயர் கூவம் நதிக்கரையிலே ஒரு கோட்டை கட்டினர். அக்கோட்டை நகரத்திற்கு வெள்ளை நகரம்’ (White Town) என்று பெயர் இட்டனர். அருகே இருந்த நரிமேடு முதலிய வெளியிடங்களை நாளடைவில் வளைத்தனர்; வர்த்தக வளம்பெற்றுத் திளைத்தனர். முன்னாளில் பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினத்தைக் குறித்தாற் போன்று இந் நாளில் சென்னப்பட்டினமே பட்டினம் என்னும் பெயருக்கு உரியதாயிற்று. சென்னையின் சீர்மைக்கு ஏற்ற முறையில் கூவம் நதியின் பெருமையும் உயர்ந்தது.