பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 ஆற்றங்கரையினிலே

என்று தாம் கண்ட தமிழ் நாட்டைப் பாட்டிலே படமெடுத்துக் காட்டினார்.

திருவேங்கடத்திற்கு வடபால் அமைந்த நாடும், அந் நாட்டில் வழங்கிய மொழியும் வடுகு என்று பெயர் பெற்றன. வடுகு என்னும் சொல் வடக்கு என்ற திசைப் பெயரின் அடியாகப் பிறந்ததாகும்.

“ வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத்

தென்திசை உள்ளிட்டு எஞ்சிய மூன்றும்”

என்று பழம் புலவர் ஒருவர் பாடிய பாட்டால் வடதிசையில் வடுகும், ஏனைய மூன்று திசைகளிலும் நெடுங் கடலும் தமிழகத்தின் எல்லையாக நின்ற நிலைமை இனிது விளங்கும்.

வடுகு மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையே திருவேங்கடம் ஒரு வரம்பாக நின்றது என்று திறம்படக் கூறினார் கவியரசராகிய கம்பர். செம்மை வாய்ந்த அம் மலையில் சிந்தையை ஒடுக்கிய சித்தரும், செற்றம் நீக்கிய சீலரும், நற்றவம் புரியும் முனிவரும் நாள் தோறும் நீராடி நலம் பெறுவர் என்று அழகுறப் பாடினார்.

இவ்வாறு தொல்காப்பியர் காலமுதல் நல்லிசைப் புலவர் எல்லோரும் நாட்டிய வடக்கெல்லையைத் தென்னிந்திய வரலாறும் வலியுறுத்துகின்றது. தமிழகத்தின் ஒர் அங்கமாக விளங்கிய தொண்டை மண்டலம் பண்டைக் காலந் தொட்டு இருபத்து நான்கு கோட்டங்களாக வகுக்கப்பட்டிருந்தது. அந் நாளில் கோட்டம் என்பது மாவட்டத்தின் பெயர். வேங்கடக் கோட்டம் தொண்டை மண்டலக் கோட்டங்களுள் ஒன்று அக் கோட்டத்திலே சிறந்து நின்றது திருவேங்கடம் என்னும் திருப்பதி. பழம்பாட்டும் பட்டயங்களும் இவ்வுண்மையை உணர்த்துகின்றன.