பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோவலூர் 42

அருமையாகப் பெற்ற சுவடியை உன்னிடம் எடுத்து வந்துள்ளேன்” என்றான். சிவாகமம் என்ற சொல்லைக் கேட்டவுடன் மலையமான் மனம் மலர்ந்தது. முனிவரது அடியின்கீழ் அமர்ந்தான் ஐம்புலன்களும் அடங்கி ஒடுங்கி, “ ஐயனே : அச் சிவாகமத்தை அடியேனுக்குச் செவி யறிவுறுத்தல் வேண்டும்” என்று இறைஞ்சினான்.

முனிவன் ஏட்டை அவிழ்ப்பான் போல் கத்தியை எடுத்தான்; குத்தினான். ஐயோ என்று அலறினான் அரசன். அது கேட்டு ஓடி வந்தான் தத்தன் என்ற காவலாளன். முனிவன்மீது பாயலுற்றான். அப்போது துடித்துக்கொண்டிருந்த மன்னன் அவனைத் தடுத்தான். “ தத்தா ! இவர் நம்மவர்” என்று சொல்லித் தரையில் விழுந்தான்.

அரசன் ஆணைக்கு அடங்கி நின்ற தத்தன் கண்ணிர் சொரிந்தான், மடிந்து விழுந்த மன்னனைத் தாங்கி மடிமேல் வைத்துக்கொண்டு ‘ என் ஐயனே ! நான் என்ன செய்வேன்?” என்று கதறினான்.

தத்தன் அழுகுரல் கேட்டி காவலாளர் எல்லாம் அங்கே ஓடிவந்தனர். முனிவர் கோலத்தில் நின்ற கள்வன்மீது சாடினர். அதுகண்ட அரசன் “தத்தா ! இவர் எம்பிரான் அடியார். எவரும் இவருக்குத் தீங்கு செய்யாமல் காத்து வெளியே கொண்டுபோய் விடு” என்று பணித்தான். மன்னனது கருணை மொழி கேட்ட காவலாள ரெல்லாம் கரைந்து உருகினர்.

“ இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்” என்று தமிழ்மறை விதித்தவாறு ஒழுகிய மன்னனை உச்சிமேற் கைகூப்பி வணங்கினர். அவன் ஆணைப்படி தத்தன் காவலில் அரண்மனையை விட்டகன்ற ஆசாரக் கள்ளனை அருவருப்புடன் பார்த்து நின்றனர்.