பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 . ஆற்றங்கரையினிலே

ஊறு செய்த கொடியோனை ஊருக்கு வெளியே அனுப்பிவிட்டு வேகமாகத் திரும்பினான் தத்தன். அவன் வரும் வரை அரசன் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. மரணவேதனையைப் பொறுத்திருந்த மன்னனை நோக்கி “அரசே ! நின் ஆணைப்படி அவனைக் காத்து வெளியே கொண்டு விட்டேன்” என்று கூறினான் தத்தன். அப்போது மன்னன் மனம் மகிழ்ந்தது; அவன் திருமுகம் மலர்ந்தது. “இன்று என் ஐயனாகிய தத்தன் செய்த உதவியை வேறு யார் செய்ய வல்லார்” என்று புகழ்ந்தான், ஆவி துறந்தான்:

இம் மாநிலத்தில் கரவாடும் வன்னெஞ்சக் கள்வர் பலவகைப் படுவர். கன்னக்கோல் கொண்டு களவு செய்வார் ஒரு வகையார் கண்ணிர் வடித்து வஞ்சிப்பார் மற்றொரு வகையார். கையெடுத்துக் கும்பிட்டுக் கரவாடுவார் இன்னொரு வகையார். நெஞ்சகத்தில் வஞ்சகத்தை வைத்து அழுகின்ற கள்ளரையும் தொழுகின்ற கள்ளரையும் திருக்குறள் குறிக்கின்றது.

“தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்

அழுத கண்ணிரும் அனைத்து”

என்ற திருக்குறள் குறிக்கும் இருவகைக் கள்வரையும் தொழு கள்ளர், அழு கள்ளர் என்று அழைப்பர் பொது மக்கள். இவர்களோடு வைத்து எண்ணத்தக்க இன்னொரு வகைக் கள்வரும் உண்டு. அன்னார் ஆசாரக் கள்ளர் எனப்படுவர். பாரத சமுதாயத்தின் தந்தையாகிய காந்தியடிகளின் உயிர் கவர்ந்தவன் ஒர் ஆசாரக் கள்ளன். பழங்காலத்தில் இத்தகைய கொடிய கள்ளனாகிய முத்தநாதனைக் கண்டது திருக்கோவலூர் நகரம்.

“ மனவீதி உண்டானால் இடவீதி உண்டு” என்பது தமிழ் நாட்டில் வழங்கும் ஒரு பழமொழி. மனம் இடம் கொடுத்தால் மனை இடம் கொடுக்கும்’ என்பது இதன் கருத்து. இந்த உண்மையை விளக்கிக் காட்டியது திருக் கோவலூர் நகரம்,