பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்ணெய்நல்லூர் 50

அப்போது அங்கிருந்தவர்கள் சுந்தரருக்காகப் பரிந்து பேசத் தொடங்கினர். “ விந்தையான வழக்கைக் கொண்டு வந்த ஐயரே ! உமது சொந்த ஊர் எது?” என்று வினவினர்.

“என் ஊர் திருவெண்ணெய்நல்லூர். இவன் பாட்டன் எழுதிக் கொடுத்த அடிமைச் சீட்டு இதோ என்னிடம் உள்ளது “ என்று காட்டினார் கிழவர்.

சுந்தரர் உள்ளம் துடித்தது. துள்ளி எழுந்து கிழவர் கையில் இருந்த ஒலையைப் பறித்தார்; கிழித்தெறிந்தார்.

அது கண்ட முதியவர்,” என் ஒலையை வலிந்து பற்றிக் கிழித்தானே இவன் ! இது முறையாகுமா? இச் செய்கையே இவன் அடிமை என்பதை மெய்ப்பிக்கும் அல்லவா ?” என்று முறையிட்டார்.

கிழவர் ஒரு “ விடாக்கண்டர் ” என்று உணர்ந்தார் சுந்தரர். பழைய மன்றாடி போலும் இவர் வழக்குத் தீர்ந்தாலன்றித் திருமணம் நடைபெறுமாறில்லை என்று தெளிந்தார்.” வழக்கமில்லாத இந்த வழக்கை உமது ஊரிலே பேசலாம் வாகும்” என்று கிழவரை அழைத்தார். அவரும் அதற்கு இசைந்து திருவெண்ணெய்நல்லூரை நோக்கி நடந்தார்; சுந்தரர் அவரைப் பின் தொடர்ந்தார்.

திருவெண்ணெய்நல்லூரில் பஞ்சாயத்தார் சபை கூடிற்று. அச்சபையின் முன்னே நின்ற சுந்தரரைச் சுட்டிக் காட்டி இவன் என் அடியான்; அதற்குச் சான்று உண்டு. இவன் பாட்டன் எழுதிக்கொடுத்த அடிமையோலையைக் காட்டினேன்; அதை வலிந்து பற்றிக் கிழித்துவிட்டான். இதுவே என் முறைப்பாடு” என்றார் முதியவர்.

அது கேட்ட சுந்தரர், “கல்வி கேள்விகளில், சிறந்த சபையோரே! நான் அந்தணன் என்பதை அறிவீர்? என்னை அடிமை என்று இம்மறையவன் சாதிக்கும் மாயம் அறியேன்” என்று மாற்றம் உரைத்தார்.