பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 - ஆற்றங்கரையினிலே

கவர்ந்தார் என்பதை அறிந்து கவலையுற்றனர் சமணர்: சமண சமயத்தைத் தழுவி நின்ற பல்லவ மன்னனிடம் சென்று, தரும சேனரது மத மாற்றத்தால் நேர்ந்த மானக் கேட்டை எடுத்துரைத்தனர். சமண நெறியில் சாலச் சிறந்த பற்றுடையவனாகிய பல்லவன் பெருஞ் சீற்றம் உற்றான்; தவறு செய்த தருமசேனரைத் தக்கவாறு ஒறுக்கத் துணிந்தான்; அமைச்சரையும் படைத் தலைவரையும் அழைத்தான்; திருவதிகையில் சிவப்பணி செய்து கொண்டிருக்கும் திருநாவுக்கரசரை இப்பொழுதே கொண்டு வருக’ என்று ஆணை பிறப்பித்தான்.

மன்னவன் இட்ட பணியை மேற்கொண்டு படைக் கலம் தாங்கிய சேனையோடு.தானைத் தலைவரும் அமைச்சரும் திருவதிகையிற் போந்து திருநாவுக்கரசரைக் கண்டார்கள், மன்னன் ஆணையைத் தெரிவித்தார்கள். வேற்படை தாங்கிய வீரர் பலர் தம்மைச் சூழ்ந்து நின்றதை நோக்கினார் நாவுக்கரசர், பல்லவ மன்னனது படைச் செருக்கைக் கண்டு இறையளவும் அஞ்சினாரல்லர். பல்லுயிரும் பலவுலகும் படைத்தளிக்கும் இறைவனுக்கு ஆட்பட்ட அடியாரைப் பல்லவன் ஆணை என்ன செய்யும் என்று எண்ணி மனத் திண்மை கொண்டார். அந்நிலையில் எழுந்தது ஒரு வீரப் பாடல்.

“ நாம்ஆர்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம் ஏமாப்போம் பிணிஅறியோம் பணிவோம் அல்லோம்

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை”

என்று பாடினார். திருநாவுக்கரசரது உயர்ந்த குறிக்கோளை அறிந்து அவரருகே செல்லத் தயங்கி நின்றனர் தானைத் தலைவரும் அமைச்சரும். அந் நிலையில் மன்னவன் ஆணையை நிறைவேற்றும் கடப்பாடுடைய படைத் தலைவருக்கு யாதும் தீங்கு வரலாகாது என்று கருதிய நாவரசர் அவருடன் செல்ல இசைந்து எழுந்தார்; பல்லவன் முன்னே சென்று நின்றார். .