பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவதிகை 2

சிவனடியார்க்கு உரிய திருநீறும் சாதனமும் அணிந்து நின்ற நாவரசரைக் கண்டு பல்லவன் சீற்றம் கொண்டான். கொடுமை பல செய்தான். அவன் செய்த தீமையெல்லாம் பொறுத்தார் திருநாவுக்கரசர். சிவனடியே தஞ்சம் எனக் கொண்டு செஞ்சொற் கவி இசைத்தார். அதிகைப் பெருமான் அடி சேர்ந்தார்க்கு அதிர வருவது ஒன்றில்லை. அன்னார் “அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை” என்று செம்மாந்து பாடினார் ஒறுத்த பல்லவன் தோற்றான்; பொறுத்த நாவரசர் வென்றார். ஆன்ம வீரத்தால் அரசாங்கத்தின் மிடுக்கையும் அடக்கி விடலாம் என்ற உண்மையை உலகறியக் காட்டினார் திருநாவுக்கரசர். அவர் வாக்கையும் வாழ்க்கை வரலாற்றை யும் ஓதி உணர்ந்து மனத் திண்மை பெற்ற தொண்டர்கள் இந் நாட்டில் எண்ணிறந்தவர். ‘பாட்டுக்கொரு புலவன் என்று பாராட்டப்படும் வீரத் தமிழ்க் கவிஞர் அன்னவருள். ஒருவர். “நாமார்க்கும் குடியல்லோம் “ என்று நாவரசர். முழக்கிய பறையின் எதிரொலி பாரதியாரின் வீரப் பாட்டிலே கேட்கின்றது. -

“ யார்க்கும் குடியல்லேன் யான்என்ப

தோர்ந்தனன் மாயையே - உன்தன் போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்

உன்னை மாயையே “

என்று அவர் வாக்கை ஆதரவாகக் கொண்டு தாக்காகப் பாடினார் பாரதியார். - -

பாரத நாட்டில் சுதந்தரப் போர் மூண்ட பொழுது வீரத் தமிழ்ப் பாட்டால் ஆங்கில நாட்டு வல்லரசின் ஆணிவேரை அசைத்தார் பாரதியார். அவர் பாட்டுக்கு ஊற்றம் அளித்ததுநாவுக்கரசரது திருவாக்கு அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்ற பாரதியார் பாட்டுக்கு அடிப்ப்டை திருநாவுக்கரசர் பாடிய ‘அஞ்சுவது யாதொன்றுமில்லை என்னும் திருப்பாட்டன்றோ?