பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 ஆற்றங்கரையினிலே

இவ்வாறு சுந்தரர் நாள்தோறும் பூங்கோயிற் பெருமானை வழிபட்டு வருகையில் ஒருநாள், நலமெல்லாம் ஒருங்கே வாய்ந்த ஒரு நங்கையை அங்கு எதிர்ப்பட்டார்; அவள் பேரழகைக் கண்ணாற் பருகிக்களிப்புற்றார். மாசற்ற இருவர் மனமும் கலந்தது; காதல் பிறந்தது கடிமணம் நிகழ்ந்தது.

திருவாரூரில் மனையறம் புரிந்தார் நம்பி ஆரூரர். அப்போது சிறந்த மாதவர் கூட்டம் ஒன்று அந் நகரில் திருத்தொண்டு செய்து கொண்டிருந்தது. அத் தொண்டர்கள் முழு நீறு பூசிய மேனியர்; மாசற இமைக்கும் உருவினர்; செற்றம் நீக்கிய மனத்தினர்.

“ கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்

ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.”

என்று திருத்தொண்டர் புராணத்தில் புகழப் பெற்றவர் இவரே.

திருத்தொண்டர் கூட்டத்தைக் கண்ட நம்பி ஆரூரரின் உள்ளத்தில் ஆர்வம் பெருகி வளர்ந்தது; இவ்வடியார்க்கு நான் அடியனாகும் நாள் எந்நாளோ என்று எண்ணி ஏங்கினார். திருத்தொண்டத் தொகை என்னும் பெயரால் ஒரு திருப்பதிகம் பாடினார். அப்பதிகத்திலே குறிக்கப்படும் தொண்டர்கள் ஒரு நாட்டினர் அல்லர் ஒரு குலத்தினர் அல்லர். பூவேந்தர் சிலர், பாவேந்தர் சிலர் வேளாளர் சிலர்: வணிகர் சிலர், மறையவர் சிலர், மாதர் சிலர்: மற்றுமுள்ளார் சிலர். இவர்க்கெல்லாம் தனித்தனியாக வணக்கம் செலுத்திய பின்னர் தொகையடியாராகிய தொண்டர்களைப் போற்றினார் நம்பி ஆரூரர். இங்ஙனம் விதந்து பாடிய அடியார்கள் காலத்திற்குப் பின்னும் வாழ்ந்த திருத்தொண்டர் அனைவரையும் தொகுத்து