பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 ஆற்றங்கரையினிலே

திருவாரூர் ஆலயத்தில் நாள்தோறும் நல்லிசை முழங்கும்; திங்கள் தோறும் திருவிழாவின் ஒளி விளங்கும்; ஆண்டு தோறும் அணிவிழா நிகழும். இத்தகைய திருநகரில் அரசு வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார் தியாகராசர். அக்காட்சியைக் கண் குளிரக் கண்ட மாணிக்கவாசகர் “ஆரூர் அமர்ந்த அரசே என்று அழைத்தார். இன்னிசைக் கருவிகளாகிய குழலும் வீணையும், கொட்டும் தாளமும், கொக்கரையும் சச்சரியும் தியாகராசரின் திருக்கரங் களிலிருக்கக் கண்டார் திருநாவுக்கரசர்.

அந்நாளில் ஆரூரில் நடந்த ஆதிரைத் திருநாளின் சிறப்பு ஒரு தேவாரப் பதிகத்தில் விரிவாகக் கூறப்படு கின்றது. வெண்கொடி பறக்கும் வீதியில் முத்து விதானமும் செம்பொற்கவரியும் சூழ்ந்து வர, பத்தர் குழாம் பாட்டிசைக்க, பல்லியம் கறங்கப் பவனி வருகின்றார் தியாகராசர். முதுமையை வென்ற முனிவர்கள் முன்னே செல்கின்றார்கள். மெல்லியல் வாய்ந்த நல்லடியார் பின்னே போகின்றார்கள். திருநீறணிந்த தொண்டர்கள் ஆனந்தக் களிப்பால் ஆடிப்பாடுகின்றார்கள். இத்தகைய தெய்வக் காட்சியைத் தமிழ்ப் பாட்டிலே காட்டுகின்றார் திருநாவுக்கரசர்.

திருவிழாக் காலங்களில் ஆரூர்ப் பெருமான் அளிக்கும் காட்சியையும், அடியார்கள் அதைக் கண்டு மகிழும் மாட்சியையும் எடுத்துரைக்கின்றது ஓர் இனிய பாட்டு.

“குழல்ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி

எங்கும் குழாம்பெருகி விழவொலி விண்ணளவும் சென்று விம்மி

மிகுதிரு ஆரூர் “

என்று சேந்தனார் பாடினார்.

இவ்வாறு அடியார்கள் அல்லும் பகலும் பாடிய நல்லிசைப் பாடல்கள் திருவாரூர்க் கிளிகளின் மனத்திலும்