பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 ஆற்றங்கரையினிலே

கருவிகளாகிய குழவினும் யாழினும் தமிழ்ப் பாட்டிசைக்க வல்ல பெரும் பாணர்கள் புகார் நகரத்தில் செழிப்புற்று வாழ்ந்தனர்.

“குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் வழுவின் றிசைத்து வழித்திறம் காட்டும் அரும்பெறல் மரயின் பெரும்பாண் இருக்கையும்” என்று அன்னாரது இசைப் புலமையைப் பாராட்டுகின்றது சிலப்பதிகாரம்.

அரசன் சபையில் ஆடல் பாடல்களை அரங்கேற்றும் வழக்கம் அந்நாளில் இருந்தது. மாதவி என்னும் அழகிய மங்கை ஐந்தாண்டில் ஆடலும் பாடலும் பயிலத் தொடங்கிப் பன்னிராண்டில் அக்கலைகளை அரசன் சபையில் அரங்கேற்றிப் பரிசு பெற்ற செய்தி சிலப்பதிகாரத் தில் விரித்துரைக்கப்படுகின்றது.

தமிழ் மக்கள் என்றும் இறைவனை வழிபடும் இயல்புடையவர். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கும் வழக்கம் தமிழ் நாட்டில் இல்லை. பல நாட்டு மக்களும் கலந்து வாழ்ந்த காவிரிப்பூம்பட்டினத்தில் சைவமும் வைணவமும், சமணமும் சாக்கியமும் இணக்கமுற்று வாழ்ந்தன. திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்றன. நாட்டிலே பசியும் பிணியும் பகையும் நீங்கி, வசியும் வளமும் நிலைபெறும் பொருட்டு மருத நிலத் தெய்வத்திற்கு ஆண்டுதோறும் திருவிழாக் கொண்டாடினர் புகார் நகரத்தார். இருபத்தெட்டு நாள் தொடர்ந்து நடந்த அத் திருவிழாவில் சிறந்த ஆடலும் பாடலும் நிகழ்ந்தன; தெய்வ மணம் கமழ்ந்தது.

இவ்வாறு பல்லாற்றானும் சிறப்புற்றிருந்த பூம்புகார் நகரம் இப்பொழுது சீரிழந்த சிற்றுாராகக் கடற்கரையில் துஞ்சுகின்றது. கருங்கடல் பொங்கி எழுந்து அந் நகரின்