பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

கையில் என்னை ஒப்படைத்துத் திரும்பிய உன் துணைவர் என் கண் கண்ட தெய்வ மனிதர்; அதுமட்டுமல்ல: அவர் என் சகோதரர்! அவரிடம் நான் மன்னிப்புப் பெற்றுவிட்டேன். இனி, நீ மன்னித்தால்தான் எனக்கு அமைதி பிறக்கும்!... நான் தம்புச் செட்டித் தெருவில்தான் இருக்கிறேன். என் ‘குட்டு’ அம்பலமாகக் கூடாதேயென்று தான் நானே உன்னைத் தேடி வருவதாய்ச் சொன்னேன். நாளை கட்டாயம் வருகிறேன், என் புதிய மன்னியைக் காண!

இப்படிக்கு,
மாலதி.’

சாவித்திரியின் உதடுகள் முனு முணுத்தன: ‘பாவம், மாலதி!’

தமிழ்ப் பண்பு சுடர் சிந்த மாலதி வந்தாள். அவள் கணவனும் உடன் வந்தான். விருந்து கடந்து முடிந்தது.

‘ராமசாமி! உங்களை நான் மறக்கவே முடியாது; உங்கள் கம்பெனியில் எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தீர்கள்; மாலதியும் திருத்தி அவளையும் டைப்பிஸ்டாகச் சேர்த்துவிட்டீர்கள். எங்கள் வாழ்நாள் பூராவும் உங்களுக்கு நாங்கள் இருவரும் கடமைப்பட்டவர்கள்!’

‘உஸ்; சத்தம் போடாதீர்கள் சுந்தரம்! என்னை மறந்தால்கூடப் பாதகமில்லை. என் நண்பர் என் பேச்சுக்காக போக்கிரியாக நடித்தாரே, அவரை மறந்து விடாதீர்கள்!’

அவர்களின் சிரிப்பைக் கேட்டு ஓடிவந்த மாலதியும் சாவித்திரியும் ஏதும் விளங்காமல் இப்படியே நின்று கொண்டிருந்தார்கள்!