பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113

வெய்துயர்ப்பும் வேப்பமரக் காற்றும் ‘மோடி’ வைத்தன. ஓலைவெடி கிளப்பிவிட்ட சத்தம் அவனுடைய செவிகளில் அறைந்தது. ‘தீபாவளி வந்திரப்போவதாங்காட்டியும்!’

காயாம்பூவின் விழிகளில் அவைகளுடைய கருமணிகள் புதைந்தன. “நாளைக்குச் செவ்வாய் சந்தைக்கெடுவிலே போயி ஒனக்கு தீபாவளிப் புடவை, ரவிக்கை வாங்கிக்கிட்டு வந்து தாரேன்!” என்று நயம் சேர்த்துச் சொன்னான் அவன்.

பொன்னரசியின் நோக்கு காற் பெரு விரல்களின் விளிம்பில் பதிந்தது!

பாலைவனம் வேளாரிடம் அச்சாரம் கொடுத்து வாங்கிய உண்டியற் கலயத்தைக் குலுக்கினான் காயாம்பூ; பிறகு அதைத் தரையில் ஓங்கி அடித்தான். சில்லறைக் காசுகள் குலுங்கின; விழுந்தன, சிதறின, மெய்ம்மையின் ஒலியென ஓசை புறப்பட்டது. பிரணவத்தின் ஒலிப்பதிவா அக்குரல்?

ஈச்சம் பாயில் பொன்னரசி முடங்கிக் கிடந்தாள். இடதுகை, கொண்டைக்கு அணையாக அமைந்திருந்தது. அகல் விளக்கின் மென்மையான ஒளியில் அவளது அழகு சுடர் தெறித்தது. ‘மஞ்சள் தாலி’ மண்ணை முத்தமிட்டுக் கொண்டிருந்தது. மண்―அவள் மாதா!

தொய்ந்திருந்த கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்த காயாம்பூ எழுந்தான்; மேனி முறுக்கேறியது. மதமதப்பு ஊறியது. மனை விளக்கைக் குறிப்பு வைத்து நடந்தவனின் பாதங்களில், நாணயங்கள் மிதிபட்டன. நாளைக்குச் செவ்வாய்க்கிழமைச் சந்தைக் கெடுவிலே போயி ஒனக்கு தீவாளிப்புடவை, ரவிக்கை வாங்கிக்கிட்டு வந்து தாரேன்!’ என்று சொன்ன பேச்சு நினைவுக் குழியிலிருந்து வெளிக்கிளம்பியது. சிந்திக் கிடந்த பணத்தைக் கணக்கிட்டபோது பதினான்கு ரூபாய்க்குச் சேர்ந்திருந்தது;