பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

புதுக்காசுகள் ஒதுங்கின; ஒதுக்கப்பட்டன. ‘பொன்னரசி தீவாளி குளிச்சு; புதிசு உடுத்திக்கினு எம்முன்னாடி வந்தாக்க எம்பாடு வேட்டைதான்!’ நினைவுக்கும் அச்சம், மடம், நாணம், உண்டு!

பொன்னரசி புரண்டு படுத்தாள், கால்மாட்டில் இருந்த மிளகாய்ப் பானை உருண்டது; அதிலிருந்து ஒரு துணி மூட்டை கழன்று விழுந்தது. ‘கோலவெறி’ வெற்றி கொள்ள எத்தனிக்கையில், மூட்டைத்துணி காலில் இடறியது. காயாம்பூவின் உடல் நடுங்கியது; ஏனென்றால், உள்ளம் நடுங்கியது. புதுப்புடவை ஒன்றும் புதிய ரவிக்கை ஒன்றும் இருந்தன. ‘அங்காளம்மை!..., அவனுடைய நெஞ்சின் நெஞ்சு கதறியது. “மாமன் மவளே, ஒன்னை இனிமே நான் எந்தப் பொறப்பிலே காணப் போறேன்? பூமுடிச்சவ நீ; நான் ஒங்கழுக்கத்திலே தாலிக் கயிற்றை முடிஞ்சேன்; நீ முந்தானை போட்டே எனக்கு!... மூணே மூணு மாசம்தான இந்தப் பாவியோடவாழமுடிஞ்சிது?...ஆத்தா அங்காளம்மே! ஏன் என்வீட்டு அங்காளம்மையைக் கொண்டுக்கிட்டுப் போனே? திவாளிக்கு ஆசையா வாங்கியாந்த இந்தச் சீலையும் இந்த ரவிக்கையும் அவளுக்கு ஒட்டுறதுக்குள்ளாற, அவ தீ கிட்டே ஒட்டிக்கிட்டாளே?...

காயாம்பூவினுடைய அங்காளம்மை நெஞ்சில் இருந்தாள்!

காயாம்பூவின் பொன்னரசி நினைவில் இருந்தாள்!

‘கட்டுச்சோறு’ காயாம்பூவின் கக்கத்தில் இருந்தது. புகையிலைக் குச்சி குழைந்தது. மனைவியிடம் பயணம் சொல்லிக்கொள்ள அவன் காத்து நின்றான். வெய்யவனின் மேனிச்சூடு வையகத்தில் பரவியது.

“ஏலே, பொன்னரசி!...”