உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123


'சேட்'டைச் சுற்றிக் கொண்டிருந்தான். அந்த சேட் ஒரு சர்க்கஸ் கம்பெனி நடத்தினான் . அதில் 'மரணக்கிணறு’ ஆட்டத்தில் மோட்டார் சைகிளில் இந்திர ஜாலம், மகேங்திர ஜாலம் புரிய வேண்டியவன் சுதாகர்-அப்படிப்பட்ட செப்பிடு வித்தைகள் ரசிகர்களுக்குள்ளே அவன் பெயரை நினைவுக் குறிப்பாக்கி விட்டன. அவன் புகழ் நீண்டது.

கணவன் புகழ் மனைவியை ஆகாயத்திற்குத்தான் தூக்கிச் சென்றது. ஆனால் அவளுடைய ஆனந்தத்திற்குப் பின்னணியாக அமைந்திருக்கும் அந்தப் பயங்கரச் சுழலை நினைத்தால், பாவம் அபலை வாசவி அப்படியே சுருண்டு விடுவாள். ‘நித்தியகண்டம் பூரணஆயுசு' என்னும்படியான தன் துணைவரின் 'தொழில்' அவளைத் தினமும் தினமும் செத்துப் பிழைக்கச் செய்தது; தாலி அன்றாடம் புனர்ஜென்மம் பெற்றுக் கொண்டிருந்தது!

"அத்தான், என்னே ஒரு நாளாகிலும் நிம்மதியுடன் இருக்கச் செய்யமாட்டீர்களா? ...'மரணக் கிணற்று ' விளையாட்டை என் நிமித்தம் விட்டுவிட மாட்டீர்களா...அத்தான், உங்களை மாலையில் சர்க்கஸ் கம்பெனிக்கு வழியனுப்பும் கான், இரவு மீண்டும் உங்களைத் தரிசிக்கையில் தான் போன உயிரைத் திரும்பப் பெறுகிறேன்...இந்த மரண விளையாட்டை விட்டுவிடுங்கள், அத்தான்...!” என்று எத்தனையோ முறை தன் கணவனிடம் மன்றாடியிருக்கிறாள் அவள். ஆனால், அவன் எதையும் காதில் வாங்கிக் கொண்டால்தானே?... புகழ் அவனை கிறுகிறுக்கச் செய்தது!

தினமும் புதுப்புது புடைவை வகைகள், ஜாக்கெட் தினுசுகள், பூப் பொட்டலங்கள் எல்லாம்தான் அவள் காலடியில் குவிந்தன; தினமும் குழந்தையை எடுத்துக் கொண்டு புருஷனும் மனைவியும் ‘மாட்டினி' ஆட்டங்களுக்கும், தேர்த் திருவிழாவுக்கும்தான் போய் வருகின்