பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129


மிருகமாக கடந்துவிட்டேன். என்னை மன்னிப்பாயா?... என்று கூறி, சுதாகர் தன் மனைவியின் கன்னங்களை அன்புடன் வருடினான். அவளுடைய ரத்தக்கீறல் படிந்த பட்டுக் கன்னத்தில் அவனுடைய கண்ணீர் முத்துக்கள் பட்டுத் தெறித்து மன்னிப்பு வேண்டின.

வாசவியின் கண்கள் தந்த அன்புக் காணிக்கை. அவளுடைய உள்ளங்கையில் மறைந்திருந்த ரமேஷின் கடிதத்திற்கு நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தது.

ரீகல் தியேட்டர் வாசலில் நின்ற பம்பாய் மரணக் கிணறு வீரன் ரமேஷின் கண்களில் கண்ணீர் புரண்டது. அவன் தனக்குள் மெதுவாகப் பேசிக்கொண்டான்.

“...இந்த ரமேஷ் அடிநாளிலே அவளுடைய காதலுக்குப் பாத்திரமான பழைய ரமேஷ்தான் என்பதை வாசவி அறிவாளா?...நான் அவளை எங்ஙனம் மறப்பேன்?...அன்று அவள் பேரில் கொண்ட காதலுக்கு, அன்பிற்கு, பாசத்திற்கு ஒரு தூய காணிக்கையாக, இன்று மரணக்கிணற்றுப் போட்டிப் பந்தயத்தில் எனக்குக் கிட்டவேண்டிய புகழைத் தியாகம் செய்ததிலே என் உள்ளம் எவ்வளவோ அமைதி அடைகிறது...! விதியின் விளையாட்டை யாரே அறியவல்லார், புவியில்?..."