பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139


வேலன் மன்னிப்பான், இனி நீங்க என் நிழலிலே-இல்லை, உங்கள் அன்பு நிழலிலே இனிமேல் நான் இருப்பேன்!” என்று தம்முள் கூறிக்கொண்டார் ராமலிங்கம்.

உதயம் கண் மலர்ந்தது: உலகமும் துயில் நீத்தது.

"எசமான்!” என்று கூப்பாடு போட்டு வந்தான் சமையற்காரன்.

ராமலிங்கம் முருகன் முகத்தில்தான் கண் விழித்தார். “ஓம் முருகா!’ என்று ஒதினார். என்றும் அடைந்திராத அமைதி அவர் மனத்தில் பிறந்தது. ஒடுங்கக் கண்ட யோகியர் உள்ளம் மாதிரி செட்டியாரின் உள்ளம் பக்குவம் அடைந்திருந்தது.

"எசமான்!”

"தவசிப்பிள்ளை, சீக்கிரம் வெந்நீர் போடும். வெளியூர் போகவேண்டும்!" என்று கூறினர் ராமலிங்கம்.

“எசமான்! ராத்திரி வந்த அந்தப் பையன் உங்ககிட்டே கொடுக்கச் சொல்லி நூறு ரூபாய் பணம் தந்துச்சுங்க!”

ராமலிங்கம் திக்பிரமை அடைந்தார். நூறு ரூபாய்ப் பணத்தின் பின்னணியில் கந்தப்பனின் உருவம் மாத்திரமல்ல, உள்ளமும் பளிச்சிட்டது. ஐந்நூறு ரூபாய்ப் பணத்தில் நூறு ரூபாயை மட்டும் எடுத்துச் சென்ற ‘விந்தை நிகழ்ச்சி' புத்துயிர் பெற்றது.

"அவன் எங்கே?"

"காலையிலேயே போயிடுச்சுங்க, அந்தத் தம்பி. இந்தாப் பாருங்க, இதையும் உங்கக் கிட்டே கொடுக்கும் படிசொல்லிச்சு!"