பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148


நாளைக்கு என்னைப் பெண்பார்க்க வரப் போகிறார்களாம்!

அப்பாவுக்கு மனம் கொள்ளாத ஆனந்தம்; கண் கொள்ளாக் கனவுகள். அம்மா போன பிறகு-காலம் உண்டாக்கிய அதிர்ச்சி மறைந்திடத் தேவைப்பட்ட இந்த இருபது மாதங்களுக்குப் பின்னர் அப்பாவின் முகத்தில் இப்போதுதான் உண்மையான ஜீவகளையைக் காண்கிறேன். அம்மா இருந்திருந்தால், இந்நேரம் ஆடிப்பாடிக் குதித்திருப்பாள். ஒரு முறை சொன்னாள்:-எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது-உறவு வகைப் பெண் மணக்கோலம் தரித்து எங்கள் இல்லம் தேடிவந்தாள். அப்போதுதான் நான் பக்குவம் அடைந்திருந்தேன். அம்மா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். "காந்திக் கண்ணு’ என்ன அம்மா அப்படி முழிச்சுப் பார்க்கிறே?... ஒனக்குந்தான் வயசு வந்திட்டதே; நாளைக்கு இதுமாதிரி நீயுந்தான் கல்யாணப் பொண்ணு நிற்பே! அப்போ ஒன்னைப் பார்த்துப் பார்த்துப் பெத்த என் வயிறு எவ்வளவோ சந்தோஷமும் ஆறுதலும் கொள்ளும்!...” என்று உள்ளத்துச் சிரிப்பு அவ்வளவையும் ஆனந்தக் கண்ணீராக்கிப் பேசினாள் அம்மா ஆனால் இன்று அம்மா இல்லை! அவள் பேசிய வார்த்தைகள் சோகக் கண்ணீர் வடித்த வண்ணம் இப்போது நின்றுகொண்டிருக்கிறேன். நான், ஏன் அம்மா இப்படி என்னைச் சோதித்துவிட்டாய் ஆண்டவனே, என் அன்னையை ஏன் இவ்வாறு சோதனைக்கு இலக்காக்கிவிட்டாய்? விழி வெள்ளத்தை வடித்தவாறு, தலையை ஏறிட்டுப் பார்த்தேன். நிலாமுற்றத்தில் செஞ்சுடர் செல்வன் விளையாடினான். ஆனாலும் என் பார்வைக்கு ஏதும் சரிவரப் புலகைவில்லை. கண்களை இருட் திரை மறைத்தது. என்னுடைய கண்களைப் பொத்தி விளையாடினாள் அம்மா! நீ இல்லாமல் இந்த விளையாட்டை என்னால் ரசிக்க முடியவில்லையே அம்மா?...