பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149


ஆலைச் சங்கு ஊளையிட்டது; ஒலம் பரப்பிற்று.

கடையிலிருந்து அப்பா சாப்பாட்டுக்குத் திரும்பும் வேளை வந்துவிட்டது. முகத்தைச் சேலை முகத்தலைப்பினால் துடைத்துக்கொண்டே அடி அளந்து நடந்தேன். கடையில் தயக்கம். கடை குறிக்கிட்டது. நிலைக்கண்ணாடி கைதட்டி அழைத்தது. நின்றேன்; நிமிர்ந்தேன். என்ன நானே பார்த்துக்கொண்டேன். கண்ணாடியில் என்ன நான் காணவில்லை. என்னுடைய நெஞ்சில் குடியிருக்த ‘அந்த ஒர் உருவம் தான் தட்டுப்பட்டது. எனக்கு வெட்கம் வந்துவிட்டது. அழகுக்கு அரும்பதவுரை மொழியும் முகவிலாசம், கனவின் காதையைப் படித்துக் கொடுக்கும் நேத்திர அமைப்பு: ஆதரிச வாழ்வின் எதிர்கால வளப்பத்திற்கு உத்தாரம் சொல்லும் இதழ்த்தோற்றம்; சுருட்டைத் தலைமுடி! நான் சுருண்டுவிட்டேன்; என் வெட்கம் என்னையே சுருட்டிவிட்டது. வெட்கம் வராதா பின்னே? ஆமாம், இதற்குப் பெயர்தான் காதலென்று கதைகள் கூறுகின்றனவா? வாழ்க! எங்கள் ஜாதகங்கள் பேழையும் மூடியுமென பொருந்துகின்றனவாம். அப்பா பெருமிதம் காட்டினார். எங்கள் மனப்பொருத்தம் அந்த ஜாதகங்களுக்குத் தெரிந்துவிட்டதோ? என்னைப் படத்தில் கண்டதும், அவருக்குப் பிடித்துவிட்டதாம்! அப்பா பொல்லாதவர் இதைப்போய் என்னிடம் சொல்லலாமா? அம்மா இருந்திருந்தால், இது அம்மாவின் கடமையாக அல்லது அலுவலாக இருந்திருக்கும் ஆனால் நான்தான் அதற்குக் கொடுத்துவைக்காதவளாகிப் போனேனே?

அம்மா, நீ என் கல்யாணத்திற்கு வரமுடியாதா? ஏன் முடியாது! நீ கட்டாயம் வருவாய்; வரவேண்டும்! நீ வேறுயார் கண்களுக்கும் தென்படாமல் போனாலும், நீ என் கண்களுக்குக் கட்டாயம் காட்சி தருவாய்! உன்னுடைய ஆசி எனக்கு நிச்சயம் கிட்டும்! நீ என் தெய்வம்!

ஆ 10